கடையநல்லூரில் தேர்தல் விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கடையநல்லூர்: கடையநல்லூரில் காவல்துறை சார்பில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் திமுக, அதிமுக, எஸ்டிபிஐ, முஸ்லிம் லீக், நாம் தமிழர், புதிய தமிழகம், மமக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் அரசியல் கட்சியினர்  ஜாதி, மதம் மற்றும் மொழியினரிடையே வேறுபாட்டை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. தனிநபர் விமர்சனம் செய்யக்கூடாது. ஜாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது. வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய கூடாது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை  பிரசாரம் செய்யக்கூடாது.

நகரில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும். கட்சி அல்லது வேட்பாளர் சார்பில் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடம், நேரம் ஆகியவற்றை காவல்துறையிடம் முன்னரே தெரிவிக்க வேண்டும். பொதுக்கூட்டம் நடத்த தேர்வு செய்துள்ள இடத்தில் அதற்கான தடை ஏதும் உள்ளதா என்பதை கட்சி அல்லது வேட்பாளர்கள் முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும். பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கும், பிறவற்றுக்கும் ஏதேனும் அனுமதி அல்லது உரிமம் தேவைப்படுமானால் தொடர்புடைய அதிகாரிகளிடம் முன்கூட்டியே அதற்கான அனுமதி அல்லது உரிமத்தை பெறவேண்டும். பொதுக்கூட்டம் ஒழுங்காக நடைபெறுவதற்கு தடையாக அந்த கூட்டத்தில் இருக்கும் யாரேனும் செயல்பட்டால் அந்த கூட்டத்தை நடத்துபவர்கள் அந்த தனிநபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, அவர்கள் காவல்துறையை நாட வேண்டும் உட்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Related Stories:

>