முதல்வர் எடப்பாடி தொடர் பிடிவாதம் எதிரொலி: பாஜவிடம் சரணடைய வேண்டாம்: டிடிவிக்கு, சசிகலா அதிரடி உத்தரவு: தனித்து போட்டியிட முடிவு

சென்னை: எடப்பாடி தொடர் அழுத்தம் கொடுப்பதால், அதிமுக போல பாஜவிடம் சரணடைய கூடாது. அமமுக தனித்து போட்டியிட வேண்டும் என்று டிடிவி.தினகரனுக்கு சசிகலா உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.   தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தொகுதி பங்கீடு குறித்து பாஜவுடன், அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதில் தங்களுக்கு 60 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். அதில் 20 தொகுதிகளை நாங்கள் சசிகலாவுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளோம் என்று பாஜ தரப்பில் கூறினர். இதற்கு அதிமுக தலைவர்கள் இருவரும் சம்மதிக்கவில்லை.

இந்நிலையில்அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சென்னையில் சந்தித்தபோது அதிமுக கூட்டணியில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 52 சட்டமன்ற தொகுதிகளில் அமமுக கனிசமான இடங்களை பெற்றுள்ளனர். அந்த கட்சி இருந்தால், சமபலத்துடன் மோதலாம். இல்லாவிட்டால், அதிமுக - பாஜ கூட்டணி தோற்று விடும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். கூட்டணியில் அமமுக வேண்டாம்.

அதற்கு பதில் கூடுதல் தொகுதிகள் வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறோம். 21 சீட் தருவதாக சொன்னோம். இப்போது 30 சீட் தருகிறோம். உங்கள் சின்னத்தில் அமமுக வேட்பாளர்களை நிற்க வையுங்கள் என்றனர். இதனால் 40 சீட் வேண்டும் என்று அமித்ஷா கூறியதோடு, நாங்கள் அமமுகவுக்கு சீட் ஒதுக்குகிறோம். அவர்களை எங்கள் சின்னத்தில் போட்டியிட வைக்க முயற்சிக்கிறோம் என்றார். இந்த நிலையில் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, எம்பிக்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரை நேற்று மாலை 3 மணிக்கு சென்னை, எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழக பாஜ தலைவர் எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன், கிஷன்ரெட்டி, வி.கே.சிங், கேசவவிநாயகம் ஆகியோர் சந்தித்து பேசினர்.

 இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, 40 தொகுதிகளுக்கான பட்டியலை அதிமுக தலைவர்களிடம் தமிழக பாஜ தலைவர்கள் வழங்கினர். அதில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 5 சீட், வடமாவட்டங்களில் 5, ெகாங்கு மண்டலத்தில் 5, தென் தமிழகத்தில் 15, மத்திய மாவட்டங்களில் 10 சீட் கேட்டிருந்தனர். இதில், 30 தொகுதிகள் ஒதுக்க அதிமுக தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அதிமுக தலைவர்கள் அழுத்ததால் அமமுக கழற்றிவிட பாஜ சம்மதம் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே இந்த விவகாரத்தில் அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் பாஜவின் வலையில் வசமாக சிக்கிக்கொண்டு விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பாஜவுடன் கூட்டணி வைத்து, குக்கர் சின்னத்தில் போட்டியிடலாம் என்று தான் தினகரன் நினைத்திருந்தார். இது தொடர்பாக தமிழக பாஜ பொறுப்பாளர் கிஷன் ரெட்டியுடன் ரகசிய பேச்சவார்த்தை நடத்தினார். ஆனால் அமமுகவினரை தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க பாஜ முடிவு செய்தது, தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து தம்பி திவாகரன் மற்றும் இளவரசி, கிருஷ்ண பிரியா, இளவரசியின் சகோதரர்கள் வடுகநாதன், கண்ணதாசன் ஆகியோரிடம் சசிகலா தீவிர ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது தினகரனின் தன்னிச்சையான நடவடிக்கையால் தான், இப்போது சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளோம். தனித்து போட்டியிடுவதே சரியாக இருக்கும். பணத்தை அதிகளவில் செலவழித்து 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று விட்டால், தேர்தலுக்கு பிறகு அதிமுகவை கைப்பற்ற வசதியாக இருக்கும் என்று அவர்கள் சசிகலாவிடம் தெரிவித்துள்ளனர்.

எனவே தனித்து போட்டியிடுவதுதான் சிறந்தது. அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரனுக்கு சசிகலா உத்தரவிட்டுள்ளார்மேலும் பாஜகவுடன் நடத்தும் ரகசிய பேச்சுவார்த்தை முறி்த்துக்கொள்ளுமாறும் சசிகலா உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.

பாஜகவை எதிர்த்து தனித்து போட்டியிட தினகரன் விரும்பவில்லை. எனினும் இப்போதைக்கு தேர்தலை சந்திக்க பணம் தேவை. சசிகலாவுடன் இருந்தால் தான், தேவையான பணம் கிடைக்கும். அதன்மூலம் தேர்தலை சந்திக்கலாம் என கணக்கு போட்டுள்ள தினகரன், தனித்து போட்டியிடும் மனநிலைக்கு வந்துள்ளார். நேற்றுகூட அமமுக தலைமையில் தான் கூட்டணி என்று தினகரன் கூறியதற்கு, சசிகலா உத்தரவே காரணம் என்று கூறப்படுகிறது. தனித்து போட்டியிடும் முடிவை சசிகலா கையில் எடுத்திருப்பது, பாஜ தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: