தேர்தல் விதிமுறையை மீறி இரவில் நகைக்கடன் வழங்கிய புகாரில் கூட்டுறவு வங்கி மேலாளர் சஸ்பெண்ட்

சேலம்: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேதி அறிவிக்கப்படும்முன் கடைசி நேரத்தில், மாநிலம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில், 6 பவுன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த சலுகையை பெற, அதிமுகவினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே சேலம் அடுத்த அயோத்தியாபட்டணத்தில், உடையாப்பட்டி கூட்டுறவு வங்கியின் சேவை மையத்தில் கடந்த 27ம் தேதி நள்ளிரவில் விதிகளை மீறி, பூட்டிய வங்கிக்குள் நகைக்கடன் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், நகை கடன் தள்ளுபடி சலுகை பெற, பதிவேடுகளில் திருத்தம் செய்வதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகியது. அதில், வங்கிக்குள் நுழையும் நபர், எதற்காக தற்போது வங்கியை திறந்து வைத்துள்ளீர்கள் என கேட்டதற்கு, அங்குள்ள அலுவலர்கள் பதில் ஏதும் கூறாமல், மழுப்புகின்றனர். அதேசமயம், பூட்டிய வங்கிக்குள் பொதுமக்களும், ஊழியர்களும் இருப்பது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வாட்ஸ்-அப்பில் வேகமாக பரவி வருகிறது.இந்த சம்பவம் குறித்து  கூட்டுறவு உயர் அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டனர். சேவை மையத்தின் மேலாளர், பணியாளர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத் தினர்.

அப்போது, விடுமுறை தினத்தன்று வங்கி சேவை மையத்தை விதிமுறையை மீறி திறந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து விடுமுறை தினத்தன்று கூட்டுறவு வங்கி சேவை மையத்தை திறந்த குற்றத்திற்காக, அந்த வங்கி சேவை மையத்தின் மேலாளர் கேசவனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கூட்டுறவு அதிகாரிகள், வங்கியின் தலைவருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து வங்கி மேலாளர் கேசவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வழங்கு வதை கண்காணித்து வருகிறோம். புகார் எழுந்துள்ள வங்கியில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’’ என்றனர்.

Related Stories:

>