தேமுதிக தனித்து போட்டியா?; இன்றைய பேச்சுவார்த்தை ரத்து: கூட்டணிக்காக அதிமுகதான் நம்மை கெஞ்சுகிறது: சுதீஷ் ஆவேசப் பேச்சு.!!!

சென்னை: நாம் அதிமுக கூட்டணியில் இல்லை எனில் அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது என சுதீஷ் ஆவேசப் பேச்சு அதிமுக இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலில் அதிமுக அணியில் இடம் பெற தேமுதிக கேட்ட தொகுதிகள் மற்றும் பணத்தை தருவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதனால் அதிமுக பாஜ, பாமகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் பாமகவுக்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அது தோல்வியில் முடிந்தது.

தேமுதிகவும் கூட்டணியில் இருந்தால் தான் நமக்கு பலமாக இருக்கும் என்று எடப்பாடி கருதியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் தேமுதிகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் தேமுதிக தரப்பில்  துணை பொது செயலாளர் பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ், இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் மாநிலங்களவை எம்பி சீட் தர வேண்டும், 20 தொகுதிகளுக்கு குறையாமல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கு அதிமுகவினர் சம்மதிக்கவில்லை. இதனால் அதிமுக, தேமுதிக பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தது. இந்நிலையில், இன்று மாலை எம். ஆர்.சி. நகரில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக- தேமுதிக பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடைபெற்ற தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் பேசிய தேமுதிக துணை செயலாளர் சுதீஷ், 2011 தேர்தலில் நாம் அதிமுக கூட்டணியில் இல்லை எனில் அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது. விஜயகாந்த் தலைமையில் கூட்டணி அமைத்தால் வர தயாராக இருப்பதாக நிறைய கட்சிகள் கூறுகின்றன. மாநிலங்களவை சீட்டுக்காக தேமுதிக ஆசைப்படவில்லை. கூட்டணிக்காக அதிமுகதான் நம்மை கெஞ்சுகிறது; நாம் அவர்களை கெஞ்சவில்லை. அதிமுக-தேமுதிக இடையே தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் சுதீஷ் ஆவேசப் பேச்சு அதிமுக கூட்டணி கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, தேமுதிக துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்பட்டது. ”நமது முதல்வர் விஜயகாந்த், நமது கொடி என்று தேமுதிகவின் கட்சி கொடியையும், நமது சின்னம் முரசு” என்றும் அதில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவால் தேமுதிக தனித்து போட்டியிட போகிறதா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அதிமுகவை மிரட்ட தான் இவ்வாறு பதிவிட்டதாக அதிமுகவில் சிலர் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: