×

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் மோடி மீது தேர்தல் கமிஷனிடம் புகார்: திரிணாமுல் எம்பி பரபரப்பு கடிதம்

கொல்கத்தா: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் புகார் அளித்துள்ளார். கடந்த பிப். 26ம் தேதி மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு,  கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே, மேற்கண்ட மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்த நிலையில் மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் நடத்தை விதிகள் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்பி டெரெக் ஓ பிரையன் தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு சான்றிதழ் வழங்கி வருகிறது. அதில், பிரதமர் மோடியின் புகைப்படம், பெயர் போன்றவை உள்ளன. மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவை தேர்தல் நடக்கும் நிலையில், பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டையும் அதிகாரங்களையும் தவறாக  பயன்படுத்துவதாக உள்ளது.

அதனால், இது தேர்தல் நடத்தை விதிகள் மீறிய செயலாகும். பொதுமக்களிடம் ​வரியை பெற்று, அதனை தங்களது பிரசாரத்துக்கு பிரதமர் மோடி பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். பிரதமரின் இந்த விதிமீறல் செயல்கள், தேர்தல் நடத்தை விதிகளின் ஏழாம் பகுதி (அதிகாரத்தில் உள்ள கட்சி) விதிகளை நேரடியாக மீறுவதாக உள்ளது. எனவே, தடுப்பூசி ேபாட்டுக் கொண்டதற்கான சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை அகற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இவரது குற்றச்சாட்டு குறித்து மேற்குவங்க பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா கூறுகையில், ‘எம்பி டெரெக் ஓ பிரையனின் புகார் குறித்து தேர்தல் ஆணையம் கண்டிப்பாக ஆராயும். இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புவதற்கான அரசியல் மற்றும் தார்மீக உரிமையை திரிணாமுல் காங்கிரஸ் இழந்துவிட்டது. ஏனென்றால் முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படம், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அரசுத் திட்டங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது’ என்றார்.

Tags : Electoral Commission ,Modi ,Trinamul MB , Trinamool MP issues sensational letter to PM over Election Code of Conduct violation
× RELATED சென்னை உள்ளிட்ட இடங்களில்...