×

மே.வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தளபதியாகிறாரா தாதா?: பிரதமர் மோடி முன்னிலையில் சவுரவ் கங்குலி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்.!!!

கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பாஜகவில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இணையவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.  மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்குகிறது. இதனையடுத்து, மேற்கு மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆட்சியை பிடிக்க இடதுசாரி கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த முறை மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க  வேண்டும் என்று பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனது. இதற்கு ஏற்ப, திராணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என 20க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இணைந்துள்ளனர். தொடர்ந்து, நடிகர், நடிகைகள் முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

இருப்பினும், திராணமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்கத்தில் பாஜக 100 தொகுதிகளுக்கு அதிகமாக வெற்றி பெற்றால் தேர்தல் ஆலோசனை வழங்கும் தொழிலை விட்டு வெளியேறுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். யார் என்ன சொன்னால் ஏன் நாம் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பல வியூகங்களை அமித்ஷா அமைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக மேற்கு வங்க மாநிலத்தில் மிகவும் பிரபலமான பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலியை தங்கள் கட்சியில் இணைக்க பாஜக முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது. வரும் மார்ச் 7-ம் தேதி மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரமாண்ட பாஜக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இணையவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் இணைந்து சவுரவ் கங்குலியும் கலந்து கொள்வார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பாஜகவில் கங்குலி இணைவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மேற்குவங்க பாஜக தலைவர் திலிப் கோஷிடம், இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது, கூட்டத்தில் இதுதொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்றார். ஆனால், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது கங்குலியின் விருப்பம். உடல்நிலை , காலநிலை இரண்டும் ஒத்துவந்து அவரும் கலந்துகொள்ள முன்வந்தால் அவரை மனதார வரவேற்கிறோம் என்றும் தெரிவித்தார்.

மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தொடர்ந்து ஓய்வில் உள்ளார். குஜராத் மாநிலத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானம் திறக்கப்பட்டபோது சவுரவ் கங்குலி பங்கேற்வில்லை என்பது குறிப்பிடத்தது.


Tags : Bengal Assembly ,Saurav Ganguli ,Modi , Will Dada become BJP commander in May Bengal Assembly elections ?: Ganguly to join BJP in presence of Prime Minister Modi at Kolkata public meeting
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...