தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் வாக்களிக்க தனி வாக்குசாவடி: தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்க எதுவாக தனி வாக்குசாவடி அமைக்க கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் பதிவு செய்ய தேர்தல் ஆணையம்  வலியுறுத்தி இருந்தது.

ஆனால் தபால் வாக்குகள் பதிவு செய்வதில் நடைமுறை சிக்கல் உள்ளதாகவும், அதனால் தேர்தலுக்கு 3  நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட தொகுதியில் அவர்கள் வாக்களிக்க ஏதுவாக தனி வாக்குசாவடிகளை அமைக்க கோரி தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனர் மாயவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை என்று மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமைநீதிபதி சஞ்சிப் பேனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமுர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது மனு குறித்து விளக்கம் பெற அவகாசம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு மார்ச் 8-ம் தேதிக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: