'எத்தனை தொகுதிகள் என்பது முக்கியமல்ல'!: ஜனநாயகத்தை வேரறுக்கும் பாஜக-வை தோற்கடிப்பதே முதல் நோக்கம்..கே.எஸ்.அழகிரி..!!

கடலூர்: இந்தியாவில் ஜனநாயகத்தை வேரறுக்கும் பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதே பிரதானம் என்பதால் அதனை நோக்கியே தங்களது தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சென்று கொண்டிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். கடலூரில் பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, தொகுதி பங்கீடு குறித்து திமுக-வுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். பந்து திமுக-வின் கைகளில் இருப்பதால் எத்தனை தொகுதிகள், என்னென்ன தொகுதிகள் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள் என்று அழகிரி குறிப்பிட்டுள்ளார். மேலும் எத்தனை தொகுதிகள் என்பது முக்கியமல்ல என்றும் இணைந்து செயல்பட்டு பாரதிய ஜனதாவை வேரறுப்பதே தங்களின் முக்கிய நோக்கம் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

பாரதிய ஜனதாவிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவதுடன் எதிர்கட்சிகளையும் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், எல்லா அரசியல் இயக்கங்களிலும் பாஜக உள்ளே நுழைந்து பல தவறுகளுக்கு அடிப்படையாக அமைகிறது. அந்த சர்வாதிகார மனப்போக்கு பாரதிய ஜனதாவிடம் இருக்கிறது என்று கூறினார். மேலும், கன்னியாகுமரி தொகுதியில் இந்த முறையும் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடும் என்று கூறிய கே.எஸ்.அழகிரி, அங்கு யார் வேட்பாளர் என்பது குறித்து தங்களது செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related Stories: