விஜயபாஸ்கர் 2 முறை வென்ற விராலிமலை தொகுதி பாஜக-விற்கு மாறுகிறதா?: தொகுதி பங்கீட்டுக்கு முன்பாகவே பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு..!!

திருச்சி: 2 முறை விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி தனது அலுவலகத்தை திறந்து தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அதிமுக, பாரதிய ஜனதா இடையே தொகுதி பங்கீட்டில் இதுவரை முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடிக்கிறது. அதிமுகவிற்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளை பாஜக கேட்பதாகவும் கூறப்படுகிறது. தொகுதி பங்கீடே முடியாத நிலையில் பாரதிய ஜனதா தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளது. தாமரைக்கு வாக்களிப்பீர் என சுவர் விளம்பரம் எழுதுவது, கட்சி அலுவலகத்தை தொடங்குவது, வேட்பாளரின் பெயரை எழுதி பரப்புரை செய்வது என பல்வேறு தேர்தல் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 2 முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற விராலிமலை சட்டமன்ற தொகுதியில் பாஜக தற்போது தேர்தல் அலுவலகத்தை திறந்துள்ளது. தாமரைக்கு வாக்களிப்பீர் என பாஜக கொடிகளுடன் பதாதைகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன. பாஜக-வின் இத்தகைய செயல்பாடு அதிமுக-வினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விராலிமலையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் 3வது முறையாக களமிறங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக 3 மாதங்களுக்கு முன்பே அவர் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

இத்தகைய சூழலில் பாஜக தேர்தல் அலுவலகத்தை திறந்து பணிகளை தொடங்கி இருப்பது அதிமுக-வினரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. பாஜக-வை சேர்ந்த மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், முத்தரைய சமூகத்தை சேர்ந்தவராவார். இந்த தொகுதியில் முத்தரைய சமூகத்தினர் கணிசமாக இருப்பதால் எளிதில் வாக்குகளை பெற முடியும் என்று பாஜக கருதுவதாக தெரிகிறது. ஆனால் பாஜக தங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாக அதிமுக-வினர் புகார் கூறியுள்ளனர்.

Related Stories:

>