போலீஸ் நிலையத்தில் எஸ்ஐயின் துப்பாக்கி வெடித்தது: ஆம்பூரில் எஸ்பி விசாரணை

ஆம்பூர்:  திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்து வருபவர் பழனி. இவர்  நேற்று மதியம் மாதனூரில் உள்ள வாகன சோதனைச்சாவடி மையத்தில் பணி முடித்து  ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையம் வந்தார்.  அங்கு எழுத்தராக பணிபுரிந்து வரும் சேதுசேகரன் என்பவரிடம், புல்லட் அனைத்தும் இருக்கிறதா? என்பதை சரிபார்த்து  குறித்துக்கொள்ள, தன்னிடம் இருந்த 9மிமீ மற்றும் 5 ரவுண்டு கொண்ட பிஸ்டலை கொடுத்துள்ளார். அதை சேதுசேகரன்  வாங்கும்போது, தவறுதலாக கை பட்டதாக தெரிகிறது. இதில் பிஸ்டல் திடீரென வெடித்துள்ளது.

அப்போது புல்லட் அருகில் இருந்த சுவரில் பட்டு தெறித்தது. இதனால் போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் புல்லட் வெடித்த  அறைக்கு பதற்றத்துடன் ஓடினர்.

அங்கு சென்று பார்த்தபோது யாருக்கும் எந்த வித காயமின்றி அதிர்ஷ்டவசமாக புல்லட் சுவரில் பட்டிருப்பது கண்டு நிம்மதி  பெருமூச்சு விட்டனர். பிஸ்டல் வெடித்ததால் எஸ்ஐ மற்றும் எழுத்தர் குழம்பியபடி அதிர்ச்சியுடன் நின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் எஸ்பி விஜயகுமார், ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையம் வந்தார். அங்கு துப்பாக்கி வெடித்த  இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>