உபரிநீர் திட்டத்திற்காக உடைக்கப்பட்ட மேட்டூர் அணையின் வலது கரை தற்காலிகமாக அடைப்பு: மாவட்டம் முழுவதும் பயனளிக்கும் வகையில் திட்டத்தை மாற்ற விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர்: மேட்டூர் அணையின் உபரிநீர் திட்டத்திற்காக அணையின் வலது கரையில் உடைக்கப்பட்ட கரை  தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புக்கு பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.மேட்டூர் அணை நிரம்பிய பிறகு வீணாகும் உபரிநீரை, சேலம் மாவட்டத்தில் உள்ள சரபங்கா வடிநில பகுதிகளில் உள்ள வறண்ட 100  ஏரிகளுக்கு நிரப்பி விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில், மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.  கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த பணிகள் மேட்டூர் அணையின் இடதுகரையில் திப்பம்பட்டியில் ₹565 ேகாடி  மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

பெரும்பாலான பணிகள் நிறைவடையாத நிலையில், கடந்த வாரம் அவசர அவசரமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி  வைத்தார். பிரதான நீரேற்று நிலையத்தில் இருந்து மேச்சேரியில் உள்ள எம். காளிப்பட்டி ஏரிக்கு, தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டது.  பணியே முடிவடையாத நிலையில் இத்திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக முதல்வர் அறிவித்தார். நீரேற்று  நிலையத்தின் மின்விசையை இயக்கி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம். காளிப்பட்டிக்கு வந்து, காவிரி நீருக்கு மலர்  தூவி வணங்கினார். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முதல்வர் சென்ற சற்று நேரத்தில், ஏரிக்கு திருப்பப்பட்ட  தண்ணீர் நிறுத்தப்பட்டது. எம்.காளிப்பட்டி ஏரி நிரம்பி, தங்கள் பகுதிக்கு தண்ணீர் வரும் என எதிர்பார்த்த விவசாயிகள் பெரும்  ஏமாற்றமடைந்தனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்தால் மட்டுமே அதன்பிறகு உபரிநீர் திட்டத்திற்கு  தண்ணீரை எடுக்கவேண்டும்.

ஆனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடி இருக்கும் நிலையில், இத்திட்டம் செயல்பாட்டுக்கு  வந்துள்ளது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்ததாக  தெரிவித்தாலும், அதிகாரிகள் இந்த துவக்க விழாவை சோதனை ஓட்டம் என்று மட்டுமே குறிப்பிடுகின்றனர். இத்திட்டம் கோனூர் ஊராட்சி பகுதியில் துவக்கப்பட்டாலும், இந்த கோனூர் ஊராட்சியில் உள்ள விவசாயிகளுக்கு எந்த பயனும்  இல்லை. ஏற்கனவே, இந்த பகுதியில் கொடிகட்டிப் பறந்த கோனூர் வெற்றிலை உற்பத்தி, அழிந்தே போனது. காவிரி நீர் வந்தால்  மீண்டும் கோனூர் கொழுந்து வெற்றிலை துளிர்க்க வாய்ப்புள்ளது. கோனூர் ஊராட்சியில் உள்ள டானம்பட்டி ஏரிக்கு தண்ணீர்  விடவேண்டும் என்று இந்த பகுதியில் உள்ள விவசாயிகள், நீதிமன்றத்தை அணுகி டானம்பட்டி ஏரிக்கும், தண்ணீர் வழங்க  வேண்டும் என தீர்ப்பும் பெற்றுள்ளனர்.

ஆனால் இன்று வரை அதற்கான எவ்வித முயற்சியும், அரசு தரப்பில் எடுக்கவில்லை.  அதேபோல் தண்ணீர் குழாய் செல்லும், மேச்சேரி ஒன்றியத்தில் முக்கிய ஏரியான குன்றி வளவு ஏரிக்கும் தண்ணீர் விடவில்லை.  அதேபோல் வீரக்கல் பகுதியில் உள்ள 2 ஏரிகளுக்கும் தண்ணீர் வழங்கப்பட வில்லை.உபரிநீர் குழாய் செல்லும் பாதையில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில், இத்திட்டத்தை  செயல்படுத்தினால் மட்டுமே, திட்டத்திலான முழு பயனும் விவசாயிகளை சென்றடையும். ஆனால் இத்திட்டம் முழுக்க  முழுக்க ஒரு பகுதிக்கு மட்டுமே பயனடையும் வகையில் செயல் படுத்தப்பட்டு வருகிறது என்று, நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிக்குழு  முன்னாள் தலைவர் ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.

 உபரிநீரை கொண்டு சேலம் மாவட்டம் முழுமையும் பயனடையும் வகையில், உபரிநீர்  திட்டம் இருக்க வேண்டும் என்பதே,  சேலம் மாவட்ட மக்களின் ஒட்டு மொத்த குரலாக  ஒலிக்கிறது. இத்திட்டத்திற்காக பிரதான நீரேற்று  நிலையத்திற்கு தண்ணிர்  கொண்டு வருவதற்காக அணைப்பகுதியில் உள்ள கரை  உடைக்கப்பட்டது. அணைக்கு இயற்கை அரணாக இருந்த குன்று ஒன்று, வெடி  வைத்து  தகர்த்து எடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின்  வலது கரை பகுதியில் நீர்த்தேக்க கரைகளை உடைத்து கால்வாய்  தோண்டியிருப்பது  குறித்த செய்தி, தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது.  இதையடுத்து,  தற்போது தோண்டப்பட்ட பகுதியில் மண் கொட்டப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணி நடைபெறும்  பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்புகளும்  போடப்பட்டு கண்காணிப்புக்கு பாதுகாவலர்களும்  நிறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: