சேலம் சரபங்கா திட்டத்தினால் காவிரி டெல்டா மாவட்டம் பாலைவனமாகும் அபாயம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

திருவாரூர்: சேலம் சரபங்கா திட்டத்தினால் காவிரி டெல்டா மாவட்டம் பாலவனமாகும் அபாயம் உள்ளதாக  விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் கடலூர்  உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 18 லட்சம் ஏக்கரில் சாகுபடி  பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுமட்டுமின்றி சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரத்திற்கும் இந்த  தண்ணீர் பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்ட  பின்னரும் காவிரியிலிருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரினை முறையாக வழங்காததால் டெல்டா  மாவட்ட விவசாயம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. மழை காலங்களில் உபரி நீரை மட்டும் திறந்து விட்டு  தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவை கர்நாடகம் சரிசெய்து வருகிறது. நிலைமை இவ்வாறு இருக்க, முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி தனது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து சரபங்கா உபரிநீர் திட்டம் என்ற  ஒரு திட்டத்தை கடந்த மாதம் 26ந் தேதி துவக்கி வைத்துள்ளார். இந்த திட்டத்திற்கு ஆரம்பகாலம் முதலே டெல்டா விவசாயிகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதனை பொருட்படுத்தாமல் இந்த திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  

உபரிநீர் திட்டம் என்ற பெயரில் சேலம் மாவட்டத்தில் இருந்து வரும் 100 ஏரிகளையும் இந்த உபரிதிட்டத்தின் மூலம்  நிரப்புவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் அபாயம் இருந்து வருவதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் மாசிலாமணி கூறுகையில், சரபங்கா திட்டத்தில்  உபரி நீர் மட்டும் தான் எடுக்கப்படும் என அரசு சார்பில் எந்தவித உத்தரவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த திட்டம் குறித்து  அரசு கெசட்டில் வெளியிட்டால் மட்டுமே இது உறுதியாக இருக்கும். மேட்டூர் அணைக்கு கர்நாடக அரசு உரிய தண்ணீரை  வழங்காமல் இருந்துவரும் நிலையில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் நிலைமை தொடர்ந்து கேள்விக்குறியாக இருந்து  வருகிறது. இதுபோன்று ஒரு உபரி நீர் திட்டத்தின் மூலம் நீர் எடுப்பது என்பது டெல்டா மாவட்டங்களின் விவசாயத்தை மேலும்  பாதிப்பிற்குள்ளாக்கி விவசாயமே செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு பாலைவனமாகும் அபாயம் ஏற்படும்.உபரி நீர் திட்டம்  என்ற பெயரில் முதல்வரின் மாவட்டத்தில் 100 ஏரிகளை நிரப்புவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்தால் மட்டுமே கடைமடை பகுதிக்கு நீர் செல்லும் நிலை இருந்து  வருகிறது. ஆனால் இதுபோன்று 20 ஆயிரம் கனஅடி என்பது மழைக் காலத்தை தவிர பிற காலங்களில் திறக்கப்படுவது இல்லை.  அதிகபட்சமாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கன அடி மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த நீரும் வரும் வழியில் மோட்டார்  பம்புகள் மூலம் உறிஞ்சப்படும். இந்நிலையில் கடைமடை பகுதிக்கு 4 ஆயிரம் கன அடி கூட வருவது சந்தேகமாக இருந்து  வருகிறது. எனவே இந்த உபரி நீர் திட்டத்தினை தமிழக அரசு கைவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்ட பின்னரும்  காவிரியிலிருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரினை முறையாக வழங்காததால் டெல்டா மாவட்ட  விவசாயம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

Related Stories: