பண பட்டுவாடாவை தடுக்க ஆம்புலன்ஸ் வாகனங்களில் தீவிர சோதனை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க  தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 26ம் தேதி  வெளியிட்டது. அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அரசியல் கட்சிகள்  பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டும், அவற்றை பறிமுதல் செய்யவும், தேர்தல்  நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) ஆகிய 3 தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 3  குழுக்கள் என 9 பறக்கும் படை குழுவினர், 9 நிலை கண்காணிப்பு குழு, 3 வீடியோ கண்காணிப்பு குழு, 3 தேர்தல் செலவின  கண்காணிப்பு குழு, 3 தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிப்பு குழு என மொத்தம் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன  சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. இக்குழுவினர் சந்தேகத்திற்கு இடமான வகையில் வர கூடிய வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

நிலை  கண்காணிப்பு குழுவினர் முக்கிய சாலைகளில் தங்களது வாகனத்தை நிறுத்தி கொண்டு அவ்வழியாக சென்று வர கூடிய  வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.

அவை உடனுக்குடன் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. ஊட்டி - கூடலூர் சாலையில் நேற்று ஆம்புலன்ஸ் மற்றும் சில அரசு  வாகனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்களின் வாகனங்கள் உள்ளிட்டவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது.

Related Stories: