7 சட்டமன்ற தொகுதிகளிலும் விதிமீறல் அரசு விளம்பரங்களை அகற்றவில்லை : எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மாவட்ட  நிர்வாகம் கடைப்பிடிக்காமல் அலட்சிய போக்குடன் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த பிப்.26ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி மார்ச் 12ல் வேட்புமனு தாக்கல் துவங்கி 19ம் தேதி  வரை நடைபெற உள்ளது. ஏப்.6ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நடத்தை விதிமுறைகள் கடந்த  பிப்.26 முதல் அமலுக்கு வந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் தலைவர்கள் சிலையை மட்டும் அதிகாரிகள் மூடி வைத்துள்ளனர். ஆனால் அரசு  அலுவலகங்களில் இருக்கும் அரசு விளம்பரங்களில் இருக்கும் முன்னாள், இந்நாள் முதல்வர்களின் படங்களை  அகற்றவில்லை. விளம்பர பலகைகளையும் அகற்ற வில்லை.

விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் விருதுநகர் நகராட்சி, மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள நகர் ஆரம்ப சுகாதார நிலையம்,  விருதுநகர் அரசு மருத்துவமனையின் அனைத்து வார்டுகளிலும் அரசு விளம்பர பலகைகள் அகற்றப்படாமல்  இருக்கின்றன. மாவட்டத்தின் தலைநகரில் இருப்பது போல் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் நகர், பேரூராட்சி, கிராமங்களில் அரசு  அலுவலகங்கள், மருத்துவமனைகள், நகராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் அரசு விளம்பர பலகைகளை அகற்றவில்லை.  

இது தொடர்பாக செய்திகள் வெளிவந்தும் மாவட்ட நிர்வாகம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிப்பதில் அக்கறை  காட்டவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தாமல் ஆளும் தரப்பிற்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகள்  மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளன.

Related Stories:

>