பீரியட்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அதில் மலிவு விலை நாப்கினை உருவாக்கிய கோயம்புத்தூரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் நடித்த ‘பீரியட். எண்டு ஆஃப் சென்டன்ஸ்’, சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசும் இந்த ஆவணப்படம், இந்தியாவில் எடுக்கப்பட்டு போட்டியில் கலந்துகொண்டது. கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மெலிசா பெர்டன்  இந்தியாவைச் சேர்ந்த குனீத் மோங்கா என்பவருடன் சேர்ந்து தயாரித்துள்ளார். இதை இயக்கியவர் அமெரிக்காவைச் சேர்ந்த ரெய்கா ஸெஹ்டாப்ச்சி.

ஆவணப்படத்தில், தலைநகர் டெல்லியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹப்பூர் (Hapur) கிராமம் ஒன்றில் உள்ள பெண்களின் எதார்த்த நிலையினை அப்படியே காட்சிப்படுத்தியுள்ளனர். அங்கு வசிக்கும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் துணிகளை மட்டுமே பயன்படுத்தும் உண்மை நமக்குத் தெரிய வருகிறது. மாதவிடாய் என்றால் என்ன என்றே தெரியாத ஆண்களின் மனநிலையும் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் சிரமம் பற்றிய புரிதலை இந்த படம் நமக்குச் சொல்கிறது.

ஆவணப்படத்தின் ஒரு காட்சியில் பெண் ஒருவர் தனது மாதவிடாய் துணியை எடுத்துக்கொண்டு, தூரமாக நடந்து சென்று மண்ணில் குழி தோண்டிப் புதைக்கிறார், 95% பெண்கள் இந்தியாவில் சுகாதாரமான நாப்கின் பயன்படுத்துவதில்லை என்கிற புள்ளி விபரமும் அதில் சொல்லப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் வசிக்கும் பெண்ணான ஸ்னேஹூக்கு 15 வயது. முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்டு அவரது பெண் உறுப்பில் இருந்து ரத்தக் கசிவு  ஏற்படும்போது, தனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்று அதில் பேசுகிறாள். தற்போது அவளுக்கு 22 வயது.

தனது கிராமத்தில் இயங்கும் சானிட்டரி நாப்கினைத் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அதில் கிராமத்தில் உள்ள பெண்கள் இணைந்து சுயதொழில் மூலமாக, நாப்கின் களைத் தயாரித்து அதைக் குறைந்த விலையில் பெண்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதில் இடம்பெற்றிருக்கும் ஒருசில காட்சிகளில் தங்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குறித்துப் பெண்கள் பேச முற்படவில்லை. அதில் ஆண்களும் நாப்கின் என்றால் என்ன என்பது மாதிரியும், மாதவிடாய் என்றால் சிரிப்பதுமாய் கடந்து செல்கின்றனர்.

ஒரு காட்சியில் நாப்கின் பயன்படுத்துவது பற்றியும், அதனால் ஏற்படும் நன்மை பற்றியும் சொல்லப்பட்டு யாருக்கெல்லாம் வேண்டும் எனக் கேட்கப்படும். யாருமே பேசாத நிலையில், ஒரே ஒரு பெண் மட்டும் முன்வந்து நாப்கினை வாங்குவார். அவர் தனக்கான நாப்கினை வாங்கிய பிறகு தன் தலையை குனிந்துகொள்கிறார். அவரைத் தொடர்ந்து அங்கிருக்கும் பெண்கள் அனைவருமே நாப்கினை வாங்க முயல்கிறார்கள். அதிலும் சிலர் வாங்க விருப்பம் காட்டாது அப்படியே இருப்பார்கள். அவர்கள் நிலை உணர்ந்த தயாரிப்பாளர் அவர்களுக்கு இலவசமாக சில நாப்கின்களைத் தருவார்.

ஆவணப் படத்தில் பேசும் அருணாச்சலம் முருகானந்தம், ‘‘பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் இந்த நாட்டில் மிகப்பெரிய பேசமுடியாத ஒன்றாகவே இருக்கிறது’’ என்கிறார். குழந்தைகள் தன் அம்மாவிடம் பேசுவதில்லை. மனைவி கணவனிடம் பேசுவதில்லை. நண்பர்கள் தன் சக நண்பர்களிடத்தில்  பகிர்ந்து கொள்வதில்லை. இந்தியாவின் நிலை இதுதான். இப்படி ஆவணப்படுத்துதல் மூலமாகவே இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெண்களின்  நிலையைப் புரிந்துகொள்ள முடியும்.

இல்லையெனில் நம்மை சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்வியலை நாம் உற்று நோக்கினால் இந்தியாவின் நிலைமை எது என்று புரியும் என்கிறார் இவர். இந்தியாவில் நாப்கினுக்கும் GST வாங்குகின்றனர். இதனால் மிகவும் எளிய நடுத்தர குடும்பங்களில் இருக்கும் பெண்கள் நாப்கின் வாங்க முடியாத நிலையில் இன்னும் துணிகளை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதனால் பலவிதமான அசௌகரியங்களை பெண்கள் சந்திக்கின்றனர். இவற்றை முன்வந்து பேசினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் எனக் குறிப்பிடுகிறார்.

பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையான தரத்தில் தயாரிப்பவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ‘டைம்’ வார இதழ், உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் இவரை இணைத்துள்ளது. இந்த நிலையை அடைய இவர் பல அவமானங்கள் மற்றும் பல வலிகளையும் கடக்க  வேண்டியிருந்தது.

பைன்மரப் பட்டையின் மரக்கூழை பயன்படுத்தி, எளிமையான முறையில் மலிவு விலை நாப்கின் தயாரிக்கும் எந்திரத்தைக் கண்டுபிடித்து, அதனை 2006ம் ஆண்டு சென்னை ஐஐடியில் நடைபெற்ற கண்காட்சியில் இடம்பெறச் செய்தார். இவரின் தயாரிப்பு ‘கிராஸ்ரூட்ஸ் டெக்னாலஜிக்கல் இன்னோவேஷன்’ விருதைப் பெற்றது. தன் கண்டுபிடிப்பை, வணிக ரீதியாக லாப நோக்கத்தோடு கொண்டு செல்லாமல், கிராமங்களில் உள்ள பெண்களுக்கான சுயதொழிலாக மாற்றினார்.

தொடர்ந்து ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி, தனது கண்டுபிடிப்பை இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள குக்கிராமங்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறார். நாப்கின் தயாரிப்பு பயிற்சியினையும் பெண்களுக்கு வழங்கி, தாங்களாகவே உற்பத்தி செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வழிவகையும் செய்து கொடுத்திருக்கிறார். 100 சதவிகிதமும் உடலுக்குக் கேடு விளைவிக்காத நாப்கின்களை, இந்தியாவிலுள்ள 100 சதவிகிதப் பெண்களையும் பயன்படுத்த வைப்பதே தனது லட்சியம் எனச் செயல்படும் இவரை 2016 ம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

- மகேஸ்வரி

Related Stories: