சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், அவற்றின் செயற்கைக்கோள் புகைப்படங்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 112 கோடி ரூபாய் செலவில் பெரும்பள்ள ஓடையின் இரு புறமும் சுவர் எழுப்ப தடை கோரி, இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், சுவர் எழுப்பினால் ஓடையின் அகலம் சுருங்கி, அதில் ஓடும் தண்ணீர் ஊருக்குள் புகுவதற்கான அபாயம் உள்ளது. ஓடையின் இருபுறமும் சுவர் எழுப்புவது உயர் நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக உள்ளதால், அந்த கட்டுமானங்களை மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும், ஓடையின் போக்கை மாற்றக்கூடாது என உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.