மெட்ரோவில் பிப்ரவரி மாதம் 20 லட்சம் பேர் பயணம்: நிர்வாகம் தகவல்

சென்னை: மெட்ரோ ரயில் சேவையை கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 20.54 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பரவலுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இந்தநிலையில், வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையில் மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவை தொடங்கப்பட்ட பிறகு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். அந்தவகையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 20.54 லட்சம் பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.

இதேபோல், 2020 செப்டம்பர் மாதத்தில் இருந்து 2021 பிப்ரவரி மாதம் வரையில் மட்டுமே 65 லட்சத்து 50 ஆயிரத்து 794 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், க்யூ-ஆர் கோடு முறையை பயன்படுத்தி 1.50 லட்சம் பேரும், பயண அட்டை பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 34 லட்சத்து 64 ஆயிரத்து 850 பேரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். இதேபோல், கடந்த பிப்ரவரி மாதத்தில் க்யூ-ஆர் கோடு பயணச்சீட்டை 40,850 பேரும், பயண அட்டையை 9,84,665 பேரும் பயணம் பயன்படுத்தியுள்ளனர்.

Related Stories: