கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த தேமுதிக பிரமுகர் வெட்டிக்கொலை: கூலிப்படைக்கு போலீஸ் வலை

சென்னை: கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து வந்த தேமுதிக நிர்வாகியை கூலிப்படையினர், ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டி படுகொலை செய்தனர். சென்னை அனகாபுத்தூர் பேருந்து நிலையம் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (37). டெய்லரான இவர், அனகாபுத்தூர் நகர தேமுதிக நகர இளைஞரணி துணை தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று கடையை மூடிவிட்டு ராஜ்குமார் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பஸ் நிலையம் அருகே அவரது பைக்கை வழிமறித்த கூலிப்படை ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில், ராஜ்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி பொதுமக்கள், இது குறித்து உடனடியாக பம்மல், சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்த ராஜ்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து, கூலிப்படையினரை தேடி வருகின்றனர். விசாரணையில், அனகாபுத்தூர் பேருந்து நிலையத்தை சுற்றிலும் கஞ்சா விற்பனை நடக்கிறது. அது குறித்து கடந்த ஆறு மாதத்துக்கு முன்பே ராஜ்குமார் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனால் கஞ்சா விற்பனைக்கு ராஜ்குமார் தடையாக இருப்பதாக கருதிய சட்டவிரோத கும்பல், ராஜ்குமாரை கொலை செய்ததா அல்லது அரசியல், தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ரஜ்ஜித் (26)  சதீஷ் ( 24) ஆகியோரை பிடித்து விசாரிக்கின்றனர். சட்டவிரோதமாக நடந்த விஷயத்தை போலீசார் முறையாக கையாளாததே கொலைக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Related Stories:

>