ஏசி 3 அடுக்கு எகானமி ரயில் பெட்டி தயாரிப்பு தொடக்கம்: இம்மாத இறுதியில் தயாராகும்

கபூர்தலா: முதல் முறையாக ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணி பஞ்சாப்பில் தொடங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் முதற்கட்டமாக 50 ரயில் பெட்டிகள் தயார் செய்யப்படும். விமானங்களைப் போல ரயில்களிலும் எகானமி வகுப்பை அறிமுகப்படுத்தும் விதமாக, ஏசி 3 அடுக்கு எகானமி ரயில் பெட்டிகளை தயாரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, ஒவ்வொரு படுக்கையிலும் தனிமனித ஏசி துவாரங்கள், சொகுசு படுக்கைகள், மேல் படுக்கைக்கு எளிதில் ஏறும் வகையிலான பிடிமானங்கள், அழகிய வடிவமைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் எகானமி ரயில் பெட்டி ஒன்று கடந்த 10ம் தேதி தயாரிக்கப்பட்டு ரயில்வேயின் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் தர அமைப்பிடம் வழங்கப்பட்டது.

இந்த பெட்டி 3 வாரங்கள் சோதனை செய்யப்பட்டது. 180 கிமீ வேகத்தில் பெட்டிகள் இயக்கி சோதிக்கப்பட்டன. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து, பஞ்சாப்பின் கபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையிடம் நவீன எகானமி வகுப்பு ஏசி பெட்டிகளை தயாரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. 248 பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. இதில், முதல் 50 பெட்டிகள் இம்மாத இறுதியில் தயாரித்து வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பெட்டிகள் சூப்பர் பாஸ்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொருத்தப்படும். மேலும், அனைத்து பயணிகளும் பயணிக்க வேண்டும் என்பதால் இதன் பயண கட்டணமும் மலிவாக இருக்கும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: