பெண் எஸ்பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை: 4 மணி நேரம் நடந்தது

பெரம்பலூர்: பாலியல் புகார் கொடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சிபிசிஐடி எஸ்பி முத்தரசி தலைமையிலான 4 பேர் கொண்ட விசாரணை குழுவினர் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். முதல்வர் சுற்றுபயணத்தில் பாதுகாப்பு பணிக்காக சென்ற சிறப்பு டிஜிபி ஒருவர், பெண் எஸ்பியை அழைத்து காரில் ஏற்றி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி புகார் கொடுக்க சென்ற அந்த பெண் அதிகாரியை வழியில் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் தடுக்க முயற்சி செய்தார். பின்னர் கடும் போராட்டத்திற்கு பிறகு பெண் ஐபிஎஸ்  சென்னை வந்து உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி ஆகியோரிடம் பரபரப்பு புகார் அளித்தார். இதையடுத்து, பாலியல் தொந்தரவு கொடுத்த சட்ட ஒழுங்கு சிறப்பு டிஜிபி பதவியில் இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றி உள்துறை செயலாளர் உத்தரவிட்டார்.

பாலியல் புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக்குழு (விசாகா கமிட்டி) அமைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரின் பேரில், சிபிசிஐடி போலீசார் சிறப்பு டிஜிபி மீது பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே போல் பெண் எஸ்.பியை புகார் அளிக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் மீதும் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி எஸ்பி முத்தரசி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 1ம்தேதியே தனது விசாரணையை தொடங்கிய எஸ்பி முத்தரசி, முதல்கட்டமாக செங்கல்பட்டு சுங்கச்சாவடியில், புகார் கொடுக்க சென்ற பெண் எஸ்.பி யின் காரை வழிமறித்து செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் சாவியை பிடிங்கிய சிசிடிவி காட்சியை பெற்று விசாரணை நடத்தினார். இந்நிலையில், சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 10.40 மணிக்கு பெரம்பலூர் வந்தனர். பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில், புகார் கொடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பிற்பகல் 1.40 மணி வரை விசாரணை நடந்தது. மீண்டும் மாலையில் ஒரு மணி நேரத்தில் விசாரித்தனர்.

Related Stories: