நச்சுனு 4 கேள்வி...சசிகலாவை சேர்ப்பது குறித்து அ.தி.மு.க முடிவு செய்யும்: பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்

* சட்டப்பேரவை தேர்தலில் பாஜ சார்பில் நீங்கள் போட்டியிட போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே?

யார் போட்டியிடுவதாக இருந்தாலும் அதுகுறித்து கட்சி தலைமைதான் அறிவிக்கும். நான் போட்டியிடுவது குறித்தும் கட்சி தலைமைதான் அறிவிக்கும். ஒரு நபரை போட்டியிட செய்வது என்பது கட்சி எடுக்கும் முடிவு. கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு நான் கட்டுப்படுவேன்.

* அதிமுக-பாஜ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி ஏன்?

தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை நல்லபடியாக சென்றுகொண்டிருக்கிறது. நேற்று கூட உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கூடிய விரைவில் தொகுதி பங்கீடு குறித்து முடிவு எட்டப்படும். பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு தொடர்ந்து கூட்டங்கள் இருந்ததால் இரவு நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

* தமிழகத்தில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரம் எடுபடுமா?

பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரம் வெற்றிகரமாக அமையும். தொடர்ச்சியாக 2014ம் ஆண்டு முதல் அவர் தமிழகத்திற்கு வந்துகொண்டு தான் இருக்கிறார். இன்று சூழல் மாறியிருக்கிறது. பிரதமரின் பிரசாரம் என்பது இந்த தேர்தலில் மிகப்பெரிய அளவில் இருக்கும். மக்களுக்கு செய்யும் திட்டங்கள், உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு கிடைத்துள்ள மரியாதை, கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காட்டிய முனைப்பு, ஊழல் குற்றச்சாட்டு இல்லாத அரசாக இருப்பது ஆகியவற்றை முன்னிறுத்தி பிரதமரின் தேர்தல் பிரசாரம் அமையும்.

 

* அதிமுக கூட்டணியில் சசிகலாவை இணைப்பதற்கு பாஜ முயற்சி எடுத்ததாகவும், அது தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறதே?

இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், சசிகலா அதிமுகவில் இணைவது அல்லது அவரை அதிமுகவில் சேர்த்துக்கொள்வது எல்லாமே அந்த கட்சி எடுக்கவேண்டிய முடிவு. பாஜவிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Related Stories: