தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்: 4வது நாளாக நீடிப்பு

புழல்: புழல் 23வது வார்டில் 40 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தூய்மை பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். கடந்த மாதம்  27ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு வந்த தூய்மை பணியாளர்கள், வருகை பதிவேட்டில் கையெழுத்திட முயன்றனர். அப்போது, சுகாதார ஆய்வாளர் சவுரிராஜ், “நீங்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டாம். உங்களுக்கு புதிய விண்ணப்பம் வழங்க வேண்டும்” என்றார். அதற்கு அவர்கள், “எதற்காக புதிய விண்ணப்பம் வழங்க வேண்டும்” என்று கேட்டனர். அதற்கு அவர் புதிய விண்ணப்பம் வழங்கினால்தான் வேலை பார்க்க முடியும் என்று கூறியதால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், புதிய விண்ணப்பம் யாரும் வழங்க உடன்படாததால், சுகாதார ஆய்வாளர், வருகை பதிவேடு நோட்டை எடுத்து சென்று விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் 3வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. தகவலறிந்த சுகாதார ஆய்வாளர் சவுரிராஜ், உதவி பொறியாளர் பாபு ஆகியோர் தூய்மை பணியாளர்களிடம், சமரச  பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து தூய்மை பணியாளர்களின் போராட்டம்  நேற்று 4வது நாளாக நீடித்தது. திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்தில் கடந்த 19ம் தேதி முதல் தனியார் நிறுவனம் புதிய டெண்டர் எடுத்து குப்பைகளை சேகரிப்பது, மக்கும், குப்பை மக்காத குப்பை தரம் பிரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே பணியில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் ஒரு சிலரை மட்டும் பணியமர்த்தி கொண்டு மற்றவர்களை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக புதியதாக ஆட்களை நியமனம் செய்துள்ளது. இதனால் ஏற்கனவே பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரி கடந்த 4 தினங்களாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி எண்ணூர் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை தொடர்ந்து பணியமர்த்த வேண்டும் என கோரி நேற்று காலை 2வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: