பீகாரில் மகாபந்தன் வெற்றியை பறித்ததாக புகார்: ஆளும்கட்சியின் ஆயுதமாக மாறுகிறதா தபால் ஓட்டு? தமிழகத்திலும் தகிடுதத்தம் நடக்க வாய்ப்பு

ஒரு காலத்தில் தபால் ஓட்டு என்பது ஒப்புக்கு ஒன்றாக கருதப்பட்டது. ஆனால் இன்று ஆளுங்கட்சியின் வெற்றி ஆயுதமாக மாறி நிற்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. எடுத்துக்காட்டு பீகார் தேர்தல். அதனால்தான் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்ததும் 2021 தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகளுக்கு மத்தியிலும் தேர்தல் கமிஷன் கொண்டு வந்த புதிய விதிமுறைகளால் தபால் வாக்கு பற்றி கிலியும் அரசியல் கட்சிகளை தொற்றிக்கொண்டுள்ளது. 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 62 வது பிரிவு, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதன் அடிப்படையில் அத்தியாவசிய சேவை பணிகளில் ஈடுபடுவோர் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தபால் வாக்கு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

 



கொரோனா ஊரடங்கு சமயத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பீகார் சட்டசபை தேர்தல் வந்தது. இந்த நேரம் தபால் வாக்குப்பதிவில் புதிய திருத்தங்களை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. அதில் வாக்களிக்க வராதவர்கள், விரும்பாதவர்கள் என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. இதன் அடிப்படையில் 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் ஆகியோருக்கு தபால் வாக்கு அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த திருத்தங்கள் அடிப்படையில் பீகார் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. நவம்பர் 10ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அமோக வெற்றி கனவில் இருந்த லாலுபிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 2015ம் ஆண்டு தேர்தலை விட மகாபந்தன் கூட்டணிக்கு வாக்குகள் அதிகம், வாக்குசதவீதமும் அதிகம். ஆனால் ஆட்சியைப்பிடிக்க கூடிய அளவுக்கு வெற்றி இடங்களை மட்டும் பெற முடியவில்லை. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 109 இடங்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால்  ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ அணி 125 இடங்களைப்பிடித்து ஆட்சியை கைப்பற்றியது.

 



எப்படி இந்த தோல்வி?. எங்கு நடந்தது தவறு?

தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பார்த்ததில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தபால் வாக்குவிதி வெற்றி கனியை பறித்துவிட்டதை மகாபந்தன் கூட்டணி பின்னர் தான் உணர்ந்தது. பீகார் தேர்தலில் 11 தொகுதிகளில் 1000க்கும் குறைவான  வாக்கு எண்ணிக்கை தான் வெற்றி தோல்வியை நிர்ணயித்தது. இதில் ஹில்சா தொகுதியில் வெற்றி வித்தியாசம்  வெறும் 12 ஓட்டுகள் தான். ஆனால் செல்லாத தபால் ஓட்டு எண்ணிக்கை 182.  இதே போல் ராம்கார்க், மதிஹானி, போரே, தெக்ரி, பார்பத்தா தொகுதிகளிலும்  வெற்றி வித்தியாசத்தை விட செல்லாத தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை அதிகம். பீகாரில் மொத்தம் பதிவான தபால் ஓட்டுகள் 2,67,607 தான். இதில் செல்லாத வாக்குகள் எண்ணிக்கை 37,872 மட்டுமே. ஆனால் இந்த வாக்குகள் தான் பீகாரை மீண்டும் ஆள்வது யார் என்பதை முடிவு செய்துள்ளது. இதை அறிந்ததும் ஆளும்கட்சியின் அழுத்தம் காரணமாகத்தான் தபால் ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாக மாற்றப்பட்டன என்று தேஜஸ்வி யாதவ் மற்றும் காங்கிரஸ் தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதனால் தான் மகாபந்தன் தோல்வி அடைந்தது என்றெல்லாம் கூறிப்பார்த்தார்கள்.

பீகார் தலைமை தேர்தல் அதிகாரி எச்.ஆர் நிவாசும் இதை ஒப்புக்கொண்டார். 6 தொகுதியில் வெற்றி வித்தியாசத்தை விட செல்லாத தபால் வாக்கு எண்ணிக்கை அதிகம்தான். அதற்காக என்ன செய்யமுடியும் என்று கைவிரித்து விட்டார். அதனால் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு என்ற முடிவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை எழுந்தது. எனவே 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு என்பதை மாற்றி தற்போது 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு என்று கூறியுள்ளனர். கடந்த பிப்ரவரி 2ம் தேதி அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் இதுதொடர்பான சுற்றறிக்கையை தலைமை தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ளது. அதன் அடிப்படையில்தான் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தாலும், வழக்கம் போல் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.

முன்கூட்டியே பட்டியல் சாதகமா? பாதகமா?

தற்போதுள்ள விதிப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகம் கொண்டவர்கள் கூட தபால் வாக்கு பதிவு செய்ய முடியும் என்பதுதான் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில்  ‘இருப்பவர்கள், இல்லாதவர்கள்’ பட்டியலை அதிகாரிகள் துணையுடன் ஆளும்கட்சி தயாரித்து அதை தபால் வாக்கு பட்டியலில் சேர்த்தால் அது ஆபத்து அல்லவா? தேர்தல் கமிஷன் நடைமுறையின்படி தபால் வாக்குப்பதிவு செய்யும் அனைவர் பட்டியலும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு விடும்.


தமிழகத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப்பதிவு செய்ய மார்ச் 16 ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம் 12 டி பார்ம் அளிக்க வேண்டும் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தபால் வாக்கு போட விரும்பும் அனைவரது  பட்டியலும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி. ஆனால் இவ்வளவு நாட்கள் முன்னதாக படிவம்  வழங்கப்பட்டு, அவர்களது பட்டியல் அரசியல் கட்சிகளிடம் வழங்கப்படுவது நேர்மையான தபால் வாக்குப்பதிவுக்கு உறுதுணையாக இருக்குமா என்பது சந்தேகமே என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

 



வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் தான் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா சம்பந்தப்பட்டவர்களின் தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்படும் என்றாலும், பட்டியலை வைத்துக்கொண்டு அதன்படி வாக்காளர்களை அரசியல்கட்சிகள் நேரில் ‘தனித்தனியாக சந்திப்பது’ தபால் வாக்கு நடைமுறையை கேலிக்கூத்தாகி விடும் ஆபத்தும் உள்ளது. இன்னொரு புறம் தேர்தல் அதிகாரிகளை ஆளும்கட்சியினர் கைக்குள் எடுத்துக்கொண்டு தனிஆவர்த்தனம் செய்யவும் வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லாமல் இல்லை.

Related Stories: