எச்1பி விசா தடை ரத்து பைடன் அரசு குழப்பம்: நீக்கலாமா? வேண்டாமா?

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் விதித்த எச்1பி விசா மீதான தடையை ரத்து செய்வதில் அதிபர் பைடன் தயக்கம் காட்டி வருகிறார். அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதை அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இந்நிலையில், கடந்தாண்டு கொரோனா பரவலின்போது, அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்காக, எச்1பி விசா வழங்குவதற்கு அப்போதைய அதிபர் டிரம்ப் தடை விதித்தார். இந்த தடை வரும் 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில், எச்1பி விசா முறையில் இருக்கும் தடை, கட்டுப்பாடுகளை நீக்கும்படி கோரிக்கைகள் வலுத்து வருகிறது. டிரம்ப் விதித்த ஏராளமான தடைகளை தற்போதைய அதிபர் ஜோ பைடன் ரத்து செய்து வருகிறார். அதேபோல், எச்1பி விசா மீதான தடையையும் அவர் ரத்து செய்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால், இந்த தடையை ரத்து செய்வதில் அவர் தயக்கம் காட்டி வருகிறார்.

இது தொடர்பான அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் அலிஜென்ரோ மயார்காஸ் நேற்று கூறுகையில், ‘‘தேவையான விஷயங்களுக்கு கண்டிப்பாக முன்னுரிமை அளிக்கப்படும். எச்1பி விசாவுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வது பற்றி இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை,” என்றார். அமெரிக்க குடிமக்கள்,  குடியமர்வு சேவை மையம், நடப்பு நிதியாண்டுக்கான எச்1பி விசாக்களை வழங்கும் நடவடிக்கையை செப்டம்பர் 1ம் தேதி முதல் மேற்கொள்கிறது. அதற்கான விண்ணப்பங்கள், எதிர்பார்த்ததை விட அதிகளவு குவிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>