சொந்த ஆதாயத்துக்காக கட்சியை பலவீனப்படுத்தும் ஆசாத்தை நீக்க வேண்டும்: ஜம்மு காங்கிரசார் போராட்டம்

ஜம்மு: ‘சொந்த ஆதாயத்துக்காக கட்சியை பலவீனப்படுத்தும் குலாம் நபி ஆசாத்தை காங்கிரசிலிருந்து வெளியேற்ற வேண்டும்’ என காஷ்மீரில்  காங்கிரசார் போராட்டத்தில் குதித்துள்ளனர். காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ள அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், கடந்தாண்டு சோனியாவுக்கு கடிதம் எழுதினர். இந்த விவகாரம் பேசித் தீர்க்கப்பட்ட நிலையில், குலாம் நபி ஆசாத் தலைமையில் ஜி-23 தலைவர்கள் சமீபத்தில் ஜம்முவில் நடந்த விழாவில் கூட்டாக பங்கேற்றனர். இதில், காங்கிரஸ் பலவீனமாகி விட்டதாக குற்றம்சாட்டிய குலாம்நபி ஆசாத், அடுத்த நாளே பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரான குலாம் நபி ஆசாத்தை கண்டித்து ஜம்மு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதில், குலாம் நபி ஆசாத்துக்கு எதிராக கோஷமிடப்பட்டது.

போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஜம்மு காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவரும் முன்னாள் பொதுச் செயலாளருமான முகமது ஷான்நவாஸ் சவுத்ரி கூறுகையில், ‘‘ஆசாத்தை காங்கிரஸ் கட்சி எப்போதும் உச்சத்தில் வைத்தே அழகு பார்த்தது. அவர் ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவி வகித்துள்ளார். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து பதவி சுகத்தையும் அனுபவித்தவர், தற்போதைய சூழலில் கட்சியை பலப்படுத்தி கைமாறு செய்ய வேண்டும். அதை விட்டு, சொந்த ஆதாயத்துக்காக கட்சியை பலவீனப்படுத்தி குளிர் காய்கிறார். இவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். சோனியா, ராகுல் தான் எப்போதும் எங்களுக்கு தலைவர்கள். கட்சி எதிராக செயல்பட்டால் அடிமட்ட தொண்டர்களாகிய எங்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்,’’ என்றார். இதைத்தொடர்ந்து, குலாம் நபி ஆசாத்தின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. ஜி-23 தலைவரை கண்டித்து இதுபோன்ற போராட்டம் நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: