ரூ.6 லட்சம் கோடியில் 574 துறைமுக திட்டங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்னுரிமை கொடுங்கள்: உலக நாடுகளுக்கு மோடி அழைப்பு

புதுடெல்லி: ‘இந்தியாவை முன்னுரிமை முதலீட்டு நாடாக உலக நாடுகள் தேர்வு செய்ய வேண்டும்,’ என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்திய கடல்சார் உச்சி மாநாட்டை நேற்று துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழித் தடங்களில் ரூ.2.25 லட்சம் கோடி மதிப்புள்ள 400 முதலீட்டு திட்டங்கள் தயாராக உள்ளன. துறைமுக துறையில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படுகிறது. வரும் 2030-2035ம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ள சாகர்மாலா திட்டத்தின் கீழ், 574 துறைமுகத் திட்டங்களில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.

 கடல்சார் துறையில் சுத்தமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், நீர்வழித்தடங்கள், கடல் விமான சேவை, கலங்கரை விளக்கத்தை சுற்றுலா தலமாக மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நாட்டில் உள்ள 189 கலங்கரை விளக்கங்களில், 78 அடையாளம் காணப்பட்டு, அவற்றை சுற்றியுள்ள நிலப்பரப்பு சுற்றுலாத் தலமாக மாற்றி அமைக்கப்பட உள்ளன. அதே போல், 16 நீர் நிலையங்கள் கண்டறியப்பட்டு அங்கு கடல் விமான சேவை தொடங்கப்படும். இதற்காக 5 தேசிய நீர்வழித் தடங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் அடுத்த கட்டமாக, 2023க்குள் உள்நாட்டு, சர்வதேச கடல்வழி பயண முனையங்கள் உருவாக்கப்பட உள்ளன. தற்போதைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் வங்கதேசம், பூடான், மியான்மர் நாடுகளுடனான பிராந்திய நீர்வழி இணைப்பு அதிகரிக்கப்படும். ரூ.3 லட்சம் கோடி முதலீட்டில் உருவாக்கப்பட உள்ள இந்திய கடல்சார் கனவு திட்டத்தின் மூலம் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். உலக கடல்சார் துறையில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக உருவெடுத்து வருகிறது. எனவே, உலக முதலீட்டாளர்கள் இந்தியாவை தங்களின் முன்னுரிமை முதலீடு நாடாக தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>