தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 330 கம்பெனி துணை ராணுவம்: கலெக்டர், எஸ்பிக்களுடன் இன்று ஆலோசனை: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 330 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் நடைபெறுவதையொட்டி ₹50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிக பணம் எடுத்துச் செல்லும்போது, அதற்கான ஆதாரங்கள் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். இதற்காக தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதியிலும் தலா 3 பறக்கும் படையினரும், தலா 3 நிலை கண்காணிப்பு குழுவினரும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வீடியோ குழு மற்றும் வீடியோ பார்வையிடும் குழு செயல்படும். ஒரு கணக்கீட்டு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, வீடியோவை பார்த்து பிடிபட்ட பணம் மற்றும் பொருட்களை வேட்பாளர் மற்றும் அரசியல் கட்சியினர் கணக்கில் சேர்ப்பது குறித்து முடிவு எடுக்கும். தேவைக்கு ஏற்ப வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 330 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டுள்ளது. தற்போது 45 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். மேலும் 15 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் இன்னும் இரண்டு நாளில் தமிழகம் வர உள்ளனர்.

2016ம் ஆண்டு தேர்தலில் 300 கம்பெனியும், 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 160 கம்பெனி வீரர்களும் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் வந்தனர்.தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை, பொது இடங்களில் 61,710 போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 10 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் இடங்களில் 21,130 போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 36 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி, மறைந்த தலைவர்களின் சிலைகளை மூட வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று டெல்லியில் தேர்தல் செலவின பார்வையாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

அரசு கோப்புகளுக்கு அனுமதி வாங்க வேண்டும் என்றால், தலைமை செயலாளர், பொதுத்துறை செயலாளர், துறை செயலாளர்கள் முதலில் முடிவு செய்து அதற்கு பிறகு தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். பின்னர் தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கும்.பொதுக்கூட்டம் நடத்துவது, திருமண மண்டபங்களில் கூட்டம் நடத்துவது தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் அனுமதி வாங்க வேண்டும்.தமிழகத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள 88,900 வாக்குசாவடி மையங்களுக்கு அனுமதி அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளில் 50 சதவீதம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பயன்படுத்தப்படும். மற்ற வாக்குச்சாவடிகளில் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும்.

இன்று 4.30 மணிக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறும். கன்னியாகுமரி மாவட்டத்தில், பணம் வாங்கிக் கொண்டு அலுவலக உதவியாளர்கள் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் விசாரணை நடத்தியபோது, தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அதாவது 25ம் தேதியே பணி நியமன ஆர்டர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

வருமான வரி, சுங்கத்துறையுடன் ஆலோசனை

பணம் பறிமுதல் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று வருமான வரித்துறை, சுங்கத்துறை மற்றும் தேர்தல் ஒருங்கிணைப்பு அதிகாரிகள்,  வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின்போது, பறிமுதல் செய்யும் பணத்தை யாரிடம் ஒப்படைப்பது, வருமான வரி  ஏய்ப்பு குறித்து தகவல் தெரிவிப்பது, பிடிபட்ட பணத்தை திரும்ப ஒப்படைப்பது மற்றும் பறிமுதல்  செய்யப்பட்ட பணத்தை கையாள்வது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து  ஆலோசிக்கப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

தபால் ஓட்டுக்கு 12பி விண்ணப்பம்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள், கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் தபால் ஓட்டுப்போட விருப்பம் தெரிவித்தால், வாக்குச்சாவடி அலுவலர்களிடம் 12பி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்களே வீட்டுக்கு நேரில் வந்து கேட்பார்கள். தபால் ஓட்டுக்காக விண்ணப்பிக்க உள்ளவர்கள் தேர்தல் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்னதாக அதற்கான நடைமுறைகளை முடித்துவிட வேண்டும்.

Related Stories: