முதல் நாளில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து விவாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: மார்ச் 8ம் தேதி பட்ஜெட் தாக்கல்

பெங்களூரு: கர்நாடக மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. வரும் 8ம் தேதி மாநில அரசின் சார்பில் 2021-22ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தாக்கல் செய்கிறார். மாநில பேரவையின் இவ்வாண்டிற்கான கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 28ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் பேரவை மற்றும் மேலவை கூட்டு கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றினார். அதை தொடர்ந்து பிப்ரவரி 5ம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் எடியூரப்பா பதிலளித்ததை தொடர்ந்து பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் காகேரி ஒத்தி வைத்தார்.

அதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. முதல் இரண்டு நாட்கள் (வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள்) ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’’ குறித்து அவையில் விவாதிக்கப்படுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு நாட்கள், அவையில் வேறு எந்த அலுவலும் எடுத்துக்கொள்ளாமல் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான கருத்துகள் மட்டுமே விவாதிக்கப்படுகிறது. இந்த விவாதத்தில் முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள் சுரேஷ்குமார், மாதுசாமி, எதிர்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார் உள்பட மூத்த அனுபவம் உள்ள மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை மையமாக வைத்து உரையாற்றுகிறார்கள். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதில் மூலம் விளக்கம் கொடுக்கப்படுகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான விவாதத்தை ஆக்கப்பூர்வமான முறையில் ஆளும் மற்றும் எதிர்கட்சியில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பில் நடத்தி முடிக்க சபாநாயகர் விஷ்வேஸ்வர ஹெக்டே காகேரி முடிவு செய்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான விவாதம் முடிந்த பின் வரும் மார்ச் 8ம் தேதி வரும் 2021-22ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை முதல்வர் எடியூரப்பா தாக்கல் செய்கிறார். அதை தொடர்ந்து பட்ஜெட் மற்றும் ஒவ்வொரு துறைகள் தொடர்பான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கிறது. நாளை தொடங்கி வரும் 31ம் தேதி வரை விடுமுறை நாட்கள் கழித்து 21 நாட்கள் பேரவை கூட்டத்தொடர் நடக்கிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு நாட்கள், அவையில் வேறு எந்த அலுவலும் எடுத்துக்கொள்ளாமல் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான கருத்துகள் மட்டுமே விவாதிக்கப்படுகிறது.

* கட்சிகள் ஆலோசனை

சட்டப் பேரவையில் பாஜ பெரும்பான்மை பலத்துடன் இருந்தாலும் எதிர்க்கட்சியிலும் 100 உறுப்பினர்களுக்கு மேல் இருப்பதால், ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார்கள். எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக ஆலோசிக்க நாளை பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்கள் கூட்டம் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடக்கிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளும் கட்சிக்கு எந்தெந்த வகையில் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூருவில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. அதேபோல் மஜத எம்எல்ஏக்கள் கூட்டம் முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. ஒரு மாதம் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் வாத, விவாதங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>