குடிநீர் வாரிய அலுவலகம் மீது தாக்குதல் சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:  டெல்லி குடிநீர் வாரிய அலுவலகம் கடந்த ஆண்டு தாக்கப்பட்டு சூறையாடப்பட்ட விவகாரத்தில் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி உண்மையை வௌியே கொண்டவர தேவையான சிசிடிவி காட்சி பதிவுகளை பாதுகாத்து வைக்குமாறு டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி குடிநீர் வாரியத்தின்(டிஜேஎல்) தலைமை அலுவலகத்தில் கடந்த ஆண்டு பாஜ கட்சியினர் புகுந்து சூறையாடியதாக டிஜேஎல் துணைத்தலைவர் ராகவ் சதா குற்றம்சாட்டி வருகிறார். அங்குள்ள கெஜ்ரிவாலின் கம்ப்யூட்டர், மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை அடித்து நொறுக்கி கும்பல் சூறையாடி சென்றதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி நீதிமன்றத்தில் ராகவ் சதா வழக்கு தொடர்ந்தார்.இதுகுறித்து நீதிமன்றத்தின் மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு சிசிடிவி கேமராக்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவற்றை ஓடவிட்டு நீதிபதி பார்த்தார். முதல் சிசிடிவி, டிஜேஎல் அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில் பகுதியில் பொருத்தப்பட்டதாகும். அந்த பதிவில், சிலர்  நுழைவுவாயிலை தள்ளிக்கொண்டு உள்ளே வர முயற்சிக்கின்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். எனினும், போராட்டக்காரர்களில் ஒருவர் சுவர்மீது ஏறி டிஜேஎல் வளாகத்தின் உள்பகுதியில் இறங்கி நுழைவாயிலை திறந்துவிடுகிறார். அதன்பின் வாயிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த கும்பல் வளாகத்தினுள் உள்ளே புகும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இரண்டாவது சிசிடிவி பதிவில், இந்தமுறைபோலீசார் உள்ளே செல்லும் யாரையும் தடுக்கவில்லை என்பதும் பதிவாகியுள்ள காட்சிகள் மூலம் தெரிகிறது. இவற்றை நீதிபதி பார்வையிட்டார். அதோடு, குற்றப்பத்திரிகையில் கலவரம் மற்றும் சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல் உள்ளிட்ட தண்டனை சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுவிட்டதாக நீதிபதியிடம் ஏசிபி தெரிவித்தார். அதையும் குறித்துக்கொண்டார்.  அதன்பின் உத்தரவிட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் ஏசிபி, டிஐயு என்கிற மாவட்ட விசாரணை யூனிட் இந்த கலவர சம்பவம் தொடர்பான அனைத்து சிசிடிவி கேமரா காட்சிகளையும் சேமித்து பாதுகாத்து வைக்க உத்தரவிட்டார். மேலும், பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி மார்ச் 9ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறி வழக்கினை ஒத்தி வைத்து தலைமை பெருநரக நீதிபதி கஜேந்தர் சிங் நாகர் உத்தரவிட்டார். டிஜேஎல் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் பாஜவுக்கு தொடர்பில்லை என்று டெல்லி மாநில பாஜ தலைவர் ஆதேஷ் குப்தா கூறி வருகிறார். எனினும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

Related Stories: