வடகிழக்கு டெல்லி கலவரத்தில் பலியான 2 குழந்தைகளுக்கு இழப்பீடு ஆம்ஆத்மி அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: வடகிழக்கு டெல்லி கலவரத்தில் பலியான 2 குழந்தைகளுக்கு போதுமான இழப்பீடு வழங்குவது தொடர்பாக ஆம்ஆத்மி அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி திடீர் கலவரம் வெடித்தது. இதில் 53 பேர் பலியானார்கள். ராம் சுகராத் என்பவரது 15 வயது மகன் கோகுல்புரி பகுதியில் நடந்த கண்டுகுண்டு வீச்சில் பிப்ரவரி 25ம் தேதி பலியானார். ரிகானா காட்டுன் என்பவரது 17 வயது மகன் பள்ளிக்கு சென்று திரும்பும் வழியில் காய்கறி மார்க்கெட் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானார். டெல்லி அரசு இவர்களின் பெற்றோருக்கு நிதிஉதவி வழங்குவதாக அறிவித்தது.

அதன் படி சிறுவர்களுக்கு ரூ.5 லட்சமும், பெரியவர்களுக்கு ரூ.10 லட்சமும் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டது. சிறுவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மட்டும் வழங்கப்படுவதை எதிர்த்து பலியான 2 சிறுவர்களின் பெற்றோரும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம் சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் கருணா நண்டி கூறுகையில்,’ கலவரத்தின்போது பலியான சிறுவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் நிவாரண நிதியும், பெரியவர்கள் மரணத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் முடிவும் தன்னிச்சையானது மற்றும் நியாயமற்றது.

கலவரத்தால் வழங்கப்படும் ​​இழப்பீடு என்பது உண்மையான சேதத்திற்கு ஓரளவுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். குறிப்பாக இறந்த சிறார்களின் விஷயத்தில், இதுபோன்ற சேதம் இறந்த குடும்ப உறுப்பினரின் வருமான இழப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். எனவே கலவர வழக்கில் பலியான அனைவரது குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்’ என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்தவழக்கில் ஆம்ஆத்மி அரசு, சீலாம்பூர் சப் டிவிசனல் மாஜிஸ்திரேட் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Related Stories:

>