குடியிருப்பு பகுதியை தாக்கும் துர்நாற்றம் பிரச்னைக்கு தீர்வுகாணாவிட்டால் மாதம் தலா 5 லட்சம் அபராதம்: டிஜேஎல் சேர்மனுக்கு என்ஜிடி நீதிபதி எச்சரிக்கை

புதுடெல்லி: கொண்ட்லியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (எஸ்.டி.பி) இருந்து வெளியேறும் வாயு துர்நாற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) டெல்லி குடிநீர் வாரியத்திற்கு (டிஜிபி) உத்தரவிட்டுள்ளது. மேலும், வாயு துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் யூனிட்டை மே மாதம் 31ம் தேதிக்குள் நிறுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி கொண்ட்லி பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், இது உடல்நலக் கேடு விளைவிக்கிறது என்றும் கூறி, இதனை கட்டுப்படுத்த கோரி குடியிருப்பாளர்கள் சங்கம் சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை தீர்ப்பாய நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயால் விசாரித்தார். அப்போது, வரும் மே மாதத்திற்கு முன்பாகவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விடும் என்று டெல்லி குடிநீர் வாரியத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.

இதனை கேட்டுக்கொண்ட நீதிபதி விசாரணை முடிவில் அளித்த உத்தரவில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து துர்நாற்றம் வெளியேறும் பிரச்னைக்கு மே மாதம் 31ம் தேதிக்குள் தீர்வு காணவேண்டும். இந்த விவகாரத்தில் டிஜேஎல் காட்டும் மெத்தனப்போக்கை ஏற்க முடியாது. எனவே, குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பாக தீர்வுகாணாவிட்டால், டெல்லி குடிநீர் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி பிரச்னைக்கு தீர்வு காணப்படும் வரை மாதம் ஒன்றிற்கு தலா ரூ.5 லட்சம் செலுத்த உத்தரவிடப்படும் என எச்சரித்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Related Stories: