வாக்குறுதி அளித்தபடி டெல்லிவாசிகள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி போட வேண்டும்: கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: கெஜ்ரிவால் ஏற்கனவே கூறியபடி, நகரில் உள்ள அனைவருக்கும் கோவிட் தடுப்பூசியை இலவசமாக வழங்கி வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று டெல்லி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அனில் குமார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று முன்தினம் இரண்டாம் கட்டமாக கோவிட் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்த முறை 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கும் இணை நோய் பாதித்த 45-59 வயதுடையவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக டெல்லியில் 136 தனியார் மருத்துவமனைகள் உட்பட மொத்தம் 192 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதில் 56 அரசு மருத்துவமனைகளில் மட்டும் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.

மீதமுள்ள தனியார் இடங்களில் தடு்ப்பூசி ஒன்றிற்கு கட்டணமாக ரூ.250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கெஜ்ரிவால் ஏற்கனவே அளித்த வாக்குறுதிபடி, டெல்லியில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கோவிட் தடுப்பூசியை போட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அனில்குமார் கூறுகையில், ‘‘டெல்லியில் வசிக்கும் 42 லட்சம் பேர் தடுப்பூசி போடப்பட வேண்டும் என டெல்லி அரசு ஏற்கனவே தெரிவித்து இருந்தது. ஆனால், அவர்களை கட்டணம் செலுத்தி தடுப்பூசியை போட்டுக்கொள்ள கூறினால் அவற்றை போட பெரும்பாலானவர்கள் முன்வரமாட்டார்கள்.

மேலும், இரு தினங்களுக்கு முன்பாக முதல்வர் கெஜ்ரிவால் பேசுகையில், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசியை பாஜ அரசு வழங்க வேண்டும் என்றும், மத்திய அரசு தவறினால் நாங்கள் இலவசமாக வழங்குவோம் என்றும் கூறினார். எனவே, தனது வாக்குறுதியை கெஜ்ரிவால் நிறைவேற்ற வேண்டும். கோவிட் பரவல் சூழல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து தரப்பு மக்களும் வருவாய் ஈட்டுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இன்னும் பலர் வேலையிழப்பை சந்தித்து வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களால் கட்டணம் செலுத்தி தடுப்பூசியை போட்டுக்கொள்ள இயலாது. இவ்வாறு கூறினார்.

* கடந்த ஜனவரி மாதம் பேட்டியளித்த கெஜ்ரிவால், அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக கோவிட் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>