டெல்லியில் புதிதாக 300 எலக்ட்ரிக் பேருந்துகளை கொள்முதல் செய்ய டெண்டர்

புதுடெல்லி: குளிரூட்டப்பட்ட தாழ்தள இ-பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஏலத்திற்கு டெல்லி போக்குவரத்து கழகம்(டிடிசி) நேற்று ஒப்புதல் அளித்தது. டிடிசியின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த முதல்வர் கெஜ்ரிவால், பொது போக்குவரத்தை எலக்ட்ரிக் பயன்பாட்டுக்கு மாற்ற தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். டெல்லியில் புதிதாக 300 எலக்ட்ரிக் ஏசி பஸ்களை கொள்முதல் செய்வதற்கான ஏல அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பரில் டிடிசி  வெளியிட்டது. இதுமட்டுமின்றி ஏற்கனவே 1000 தாழ்தள சிஎன்ஜி பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஏல அறிவிப்பும் விடப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 ரகத்தில் வடிவமைக்கப்பட்ட இ்நத பேருந்துகள் மே மாதம் முதல் வர தொடங்கும். முழு எண்ணிக்கையும் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் வந்து சேரும். நகரில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக கொள்முதல் செய்யப்பட உள்ள தாழ்தள எலக்ட்ரிக் பேருந்துகள் அனைத்திலும், சிசிடிவி, பேனிக் பட்டன்கள், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளடக்கியதாக இருக்கும். புதிதாக 1000 டிடிசி பேருந்துகள் வந்து சேரும் பட்சத்தில் மொத்த டிடிசி பேருந்துகளின் எண்ணிக்கை 5060 என்கிற அளவை எட்டும்.

இதுபற்றி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில், 300 எலக்ட்ரிக் தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஏல அறிவிப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த பேருந்துகள் வரும் அக்டோபர் மாதம் முதல் வரத்தொடங்கி முழு எண்ணிக்கை பேருந்துகளும் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் வந்து சேரும். முதல்வர் கெஜ்ரிவாலின் வலிமைமிக்க தலைமையின் கீழ் டெல்லி அரசு வெளியிட்ட இ-வாகன கொள்கையின் அடிப்படையில் இதுபோன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் கெலாட் தெரிவித்தார்.

* கெஜ்ரிவால் ட்விட்

புதிதாக எலக்ட்ரிக் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது குறித்து கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், தனியார் வாகனங்கள் உட்பட, அனைத்து பேருந்துகளையும் எல்கட்ரிக் பேருந்துகளாக மாற்ற உறுதி ஏற்றுள்ளோம். டெல்லி மக்கள் மற்றும் அரசின் கூட்டு முயற்சியால் காற்றுமாசுவை வெற்றிகொள்வோம் என பதிவிட்டுள்ளார்.

Related Stories: