முறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கும்புளி கிராமத்தில் 2 வாரமாக தொடர் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. இதனை சரி செய்யாத அதிகாரிகளை கண்டித்து, அப்பகுதி வழியே வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஏடூர் ஊராட்சி கும்புளி கிராமம் 9வது வார்டில் 750க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 2 வாரங்களாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதையொட்டி, சுமார் 1 கிமீ தூரத்துக்கு சென்று குடங்களில் குடிநீர் எடுத்து வருகின்றனர். சிலர், பலர் பணம் கொடுத்து கேன்களில் தண்ணீர்  வாங்கி பயன்படுத்துகின்றனர். குடிநீர் பிரச்னை குறித்து 7 முறை ஊராட்சி மன்ற தலைவரிடம்  புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த 9வது வார்டு மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்  கும்புளி சாலைக்கு சென்றனர். அப்போது கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் சாலையில் முட்களை வெட்டி போட்டு, சாலையில் தடுப்புகளை அமைத்தும் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில், அவ்வழியே மாதர் பாக்கத்தில் இருந்து செங்குன்றம்  சென்ற அரசு பஸ்சை (தஎ113) சிறைபிடித்தனர். தகவலறிந்து ஆரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அப்போது, குடிநீர் பிரச்னையை தீர்க்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்நறனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>