தமிழகத்தில் என்ன வியூகம் அமைக்கிறார் அமித்ஷா: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில் வரும் 7-ல் மீண்டும் தமிழகம் வருகை.!!!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் தொகுதி பங்கீட்டில் தீவரமாக ஈடுபட்டுள்ளனர். திமுக கூட்டணியில் தற்போது வரை 2 கட்சிகளுக்கு மட்டும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தொடர்ந்து,பாஜகவிடம் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிஷன்ரெட்டி, சி.டி.ரவி ஆகியோர் சென்னை வந்தனர். அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது தங்களுக்கு 60 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். அதில் 20 தொகுதிகளை நாங்கள் சசிகலாவுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினர். இதற்கு அதிமுக தலைவர்கள் இருவரும் சம்மதிக்கவில்லை. இருவரும் விடாப்பிடியாக சசிகலாவை சேர்க்க முடியாது என்று கூறிவிட்டனர். இந்த தகவல் கடந்த சனிக்கிழமை சென்னை வந்த அமித்ஷாவிடம், பாஜக மேலிட பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதனால் கோபமடைந்த அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்திக்க மறுத்து விட்டார். பின்னர் இருவரும் சேர்ந்து சந்திக்க வேண்டும் என்று மீண்டும், மீண்டும் வலியுறுத்தியதால், தனது டெல்லி பயணத்தை தள்ளி வைத்து விட்டு அவர்களை ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு சந்தித்தார். அப்போது 3 மணி நேரம் சந்திப்பு நடந்தது.

அமித்ஷாவுடனான பேச்சில் சசிகலாவை சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மறுத்து விட்டனர். நீங்கள் எவ்வளவு தொகுதிகள் வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறோம். சசிகலாவை சேர்த்தால் ஒரு குறிப்பிட்ட சாதி கட்சியாக மாறிவிடும். அதனால் அவர்களை சேர்க்க முடியாது என்று கூறிவிட்டனர். கடைசியில் 30 சீட்டுக்கு அமித்ஷா சம்மதம் தெரிவித்தார்.

இதற்கிடையில் 30 தொகுதிகளுக்கான பட்டியலை அதிமுக தலைவர்களிடம் தமிழக பாஜக தலைவர்கள் நேற்று நட்சத்திர ஓட்டலில் நடந்த பேச்சுவார்த்தையின்போது வழங்கினர். அதில் பெரும்பாலும் அதிமுக எம்எல்ஏக்கள் உள்ள  தொகுதிகளை கேட்டு வருகின்றனர். இதனால் அதில் ஒரு சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க விருப்பம் தெரிவித்த தலைவர்கள் பெரும்பாலான தொகுதிகளை தங்களுக்கே வழங்கும்படி கேட்டு வருகின்றனர்.

இப்போது அதிமுக சீட் ஒதுக்குவதற்கு பதில் பாஜகவிடம் கேட்டு பெறும் நிலை தற்போது உள்ளதால், பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. இன்று அல்லது நாளைக்குள் பேச்சுவார்த்தை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வரும் 7-ம் தேதி ஞாயிற்று கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார். தொகுதி பங்கீடு நெருங்கிய நிலையில், அமித்ஷா வருகை முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்றாலும் அமித்ஷா தொடர்ந்து தமிழகம் வருவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அமித்ஷாவின் வியூகம் என்னவென்று இன்று வரை தொடர் கதையாகவுள்ளது. தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வரும் 10-ம் தேதி தமிழகம் வருகிறார்.

Related Stories:

>