×

‘முதுகு வலியுடன்தான் போட்டிகளில் ஆடுகிறேன்’: ரஃபேல் நடால் பேட்டி

மானாகோர் (ஸ்பெயின்): ‘‘கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகவே முதுகு வலியுடன்தான் போட்டிகளில் ஆடிக் கொண்டிருக்கிறேன். வலியில்லாமல் எப்போது ஆடினேன் என்பதே உண்மையில் எனக்கு நினைவில்லை’’ என்று டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.ஆடவர் ஒற்றையர் டென்னிசில் சர்வதேச தரவரிசையில் (ஏடிபி) தற்போது 9.850 புள்ளிகளுடன் ஸ்பெயினின் டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால் 2ம் இடத்தில் உள்ளார்.  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 20 ஆடவர் ஒற்றையர் பட்டங்களை வென்று, ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்துள்ளார். தற்போது ஏடிபி தரவரிசையில் 310 வாரங்கள் முதலிடத்தில் என்ற சாதனையை எட்டியுள்ள செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 18 ஆடவர் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார்.

தரவரிசையில் தற்போது 2ம் இடத்தில் உள்ள ரஃபேல் நடால் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முதுகு வலியால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். முதுகுவலி காரணமாகவே அவர் ரோட்டர்டாம் மற்றும் அகாபல்கோ ஆகிய போட்டிகளில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக முதுகு வலியுடன்தான் போட்டிகளில் ஆடிக் கொண்டிருக்கிறேன். கடைசியாக எப்போது வலியில்லாமல் நான் போட்டிகளில் ஆடினேன் என்பது உண்மையிலேயே எனக்கு நினைவில்லை. நேர்மையாக சொல்லப் போனால் எனது டென்னிஸ் வாழ்வின் ஒரு அங்கமாகவே முதுகு வலியை உணர்கிறேன்.

அடுத்து வரும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் நான் ஆட வேண்டும் என்றால், எனக்கு கண்டிப்பாக இந்த ஓய்வு தேவை. பிசியோதெரபி மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன். முதுகுவலியுடன் ஆடுவதால் ஆக்ரோஷமாக சர்வீஸ் செய்ய முடியவில்லை. அதற்காக பொசிஷனை மாற்றிக் கொண்டு, சர்வீஸ் செய்யும் போது, அது பலவீனமான ஷாட்டாக இருக்கிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சர்வீஸ்கள் துல்லியமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்’’ என்று தெரிவித்துள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் நடப்பு சாம்பியனான நடால், அடுத்து வரும் மியாமி ஓபனில் ஆடுவாரா என்பது குறித்து ஏதும் கூறவில்லை. இருப்பினும் மியாமி ஓபனில் அவர் ஆடமாட்டார் என்றே கூறப்படுகிறது. பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை குறி வைத்து, அதற்கு தேவையான பயிற்சிகளை களிமண் மைதானங்களில் அவர் மேற்கொண்டு வருகிறார்.Tags : Rafael Nadal , ‘I play in matches with back pain’: Interview with Rafael Nadal
× RELATED பிரெஞ்சு ஓபனில் 13-வது முறையாக பட்டம் வென்று ரஃபேல் நடால் சாதனை