அனல் பறக்கும் அசாம் தேர்தல் களம்: 7 கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் மெகா கூட்டணி: பிரச்சார வியூகத்தில் பாஜக

திஸ்பூர்: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் அசாம் மாநிலத்தில் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 24ம் தேதியுடன் முடிகிறது. கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலமும் விரைவில் முடிகின்றன. இவற்றுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதே நேரம், கூட்டணியோ, தொகுதி பங்கீடுகளோ முடியாத போதிலும், இம்மாநிலங்களில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் கடந்த 26-ம் தேதி புதுச்சேரி, கேரள மாநிலங்களை போல், தமிழகத்திலும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. இவற்றில் பதிவாகும் வாக்குகள், மே 2ம் தேதி எண்ணப்பட உள்ளது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 30 ஆண்டுகள் அசாம் மாநிலத்தை காங்கிரஸ் கட்சி ஆண்டு வந்தது. 1978-ம் ஆண்டு ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றியது. அதன் பிறகு அசாமில் காங்கிரஸ் கட்சி செல்வாக்கை இழக்க துவங்கியது.

அதன் பிறகு அசாம் மாநில கட்சிகள் பலம் பெற்றன. மீண்டும் 2001-ல் ஆட்சியை பிடித்தது காங்கிரஸ். 2016 வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 15 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அசாமில் நீண்ட காலம் ஆட்சி செய்தவர் பெருமைக்குரியவருமான தருண் கோகாய் அண்மையில் மறைந்தார். அதற்கு பிறகு முன்னணி தலைவர்கள் இல்லாத சூழலில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 6% வரை காங்கிரஸ் கட்சி தனது தனிப்பட்ட வாக்கு வங்கியை அசாம் மாநிலத்தில் அதிகரித்திருந்தது.

இந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அன்சாலிக் கனமார்ஷா, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொண்டு மெகா கூட்டணியை அமைத்துள்ளது காங்கிரஸ். பாரதிய ஜனதாவின் நீண்ட நாள் கூட்டாளியான போடோலேண்ட் பீப்பிள்ஸ் ஃபிரன்ட், தனது கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியின் மெகா கூட்டணியில் இணைந்தது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியுடன் அசாம் கன பரிசத் கூட்டணியில் நீடிக்கிறது. இப்படி 7 கட்சிகள் எதிரணியில் இருக்க ஆளும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வியூகங்களை விட பிரச்சார வியூகங்களை பெரிதாக நம்புகிறது.

குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இன்னும் முதல்வர் வேட்பாளர் இறுதி செய்யப்படாத நிலையில், முதல்வர் வேட்பாளராக சர்பானந்த சோனாவாலை முன்னிறுத்தி வருகிறது. பாரதிய ஜனதா கட்சி, அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் பலரும் அசாம் மாநிலத்தில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயினும் தேர்தல் முடிவுகள் எளிதாக இருக்காது என்பதால் சுவாரஸ்யத்துக்கும் சலசலப்புக்கும் குறைவிருக்காது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: