தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தற்போது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு வீடியோ கண்காணிப்பு குழுவும் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் என தற்போது தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக 234 சட்டமன்ற தொகுதிகளில் 702 பறக்கும் படைகள் தங்களுடைய கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள். அதேபோல நிலையான கண்காணிப்பு குழுக்களை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 702 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளை பொறுத்தவரை, துணை ராணுவப்படையை சேர்ந்த 330 கம்பெனிகள் பாதுகாப்பு பணிக்கு தேவைப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி, இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 160 கம்பெனிகள் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதற்கு முன்னதாக 2016 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை 300 கம்பெனிகள் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலுக்கு 330 கம்பெனிகள் துணை ராணுவப்படை தேவைப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு தம்முடைய இசைவையும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாகவும் ஏற்கனவே தமிழகத்தை பொறுத்தவரை 45 கம்பெனிகள் துணை ராணுவப்படையினர் தமிழகம் வந்துவிட்டார்கள். மேலும் ஒருசில நாட்களில் 15 கம்பெனிகள் துணை ராணுவப்படையினர் தமிழகம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related Stories:

>