பாலியல் சர்ச்சை விவகாரத்தில் சிறப்பு டிஜிபிக்கு உதவிய உயர் அதிகாரிகள்: முதல் தகவல் அறிக்கையில் அம்பலம்

சென்னை: பாலியல் சர்ச்சையில் சிக்கியிருக்கும் சிறப்பு டிஜிபிக்கு மேலும் பல உயர் அதிகாரிகள் ஆதரவாக செய்யல்பட்டிருப்பது அவர் மீதான முதல் தகவல் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் திருச்சி, புதுக்கோட்டை, மாவட்டங்களுக்கு சென்ற போது அவரது பாதுகாப்பு பணிக்காக சென்ற தம்மை சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு செய்ததாக பெண் எஸ்பி ஒருவர் டிஜிபியிடமும், உள்துறை செயலரிடமும் புகார் அளித்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிறப்பு டிஜிபி மீதான புகாரை விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த வழக்கும் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவியதாக கூறப்படும் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள பின்னணியில் சிபிசிஐடி போலீசாரின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. கரூரில் கடந்த மாதம் 21-ம் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சிறப்பு டிஜிபி முதலமைச்சர் அடுத்தக்கட்ட பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு தன்னுடன் வருமாறு அந்த பெண் எஸ்பியை அழைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின் சிறப்பு டிஜிபி தவறாக நடந்து கொள்ள முயன்றதை விவரமாக பெண் அதிகாரி பதிவு பதிவிட்டிருப்பதும் இடம்பெற்றுள்ளது. மறுநாள் 22-ம் தேதி தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளரிடம் புகார் அளிக்க சென்னை கிளம்பிய தம்மை சென்னை செல்ல விடாமல் தடுக்க சிறப்பு டிஜிபி பல உயர் அதிகாரியை நாடியதாக தெரிவித்துள்ள பெண் எஸ்.பி. அவர்கள் தம்மை தொடர்பு கொண்டதாக கூறியுள்ளார். செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை நெருங்கும் போது எஸ்பி கண்ணன் மற்றும் 15 காவலர்கள் வழிமறித்து சென்னை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ள பெண் எஸ்பி தனது பாதுகாவலரையும் ஓட்டுநரையும் விரட்டி கார் சாவியை வாகனத்தில் இருந்து எடுத்துக் கொண்டதாக கூறியுள்ளார்.

மேலும் காருக்கு முன்னதாக அவர்களது காரை நிறுத்தி தொடர்ந்து முன்னேறி செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தியதாகவும் கூறியுள்ளார். முதல் தகவல் அறிக்கை வெளியானதன் மூலம் இந்த பாலியல் விவகாரத்தில் டிஜிபி மற்றும், செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மட்டுமல்லாமல் மேலும் 3 எஸ்பிக்களும் புகார் அளிக்க வந்த பெண் எஸ்பியை தடுக்க முயன்றது அம்பலமாகியுள்ளது.

Related Stories: