காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 6,7-ம் தேதிகளில் நேர்காணல்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 6,7-ம் தேதிகளில் நேர்காணல் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப் 6-ம் தேதி நடைபெற உள்ளது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு, போட்டியிடும் தொகுதிகள், பிரச்சாரப் பணிகள், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் திமுக, அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் பங்கீட்டுக் குழுவினர், திமுக தேர்தல் பங்கீட்டுக் குழுவினரைச் சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 6,7-ம் தேதிகளில் நேர்காணல் நடத்தப்படும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நடைபெறவுள்ள 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் தோழர்களிடமிருந்து பிப்ரவரி 25 முதல் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

விருப்ப மனு அளிக்க இறுதி நாள் மார்ச் 5ம் தேதி ஆகும். தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த அனைவரிடமும் மார்ச் 6 மற்றும் 7 -ம் தேதிகளில்  சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நேர்காணல் நடைபெறவுள்ளது. விருப்பமனுவினை சமர்ப்பித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் நடைபெறும் நேர்காணலில் அவசியம் பங்கேற்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Related Stories: