அதிமுக - தேமுதிக தொகுதி பங்கீடு தொடர்ந்து இழுபறி: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்ததா தேமுதிக?

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப்பங்கீடு குறித்து பேசுவதற்கு தேமுதிகவுக்கு அதிமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. இதே கூட்டணியை வரும் சட்டமன்ற தேர்தலில் தொடர கூட்டணி கட்சி தலைவர்கள் விரும்பினர். இதற்காக, தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை பெற கட்சிகள் மும்முரம் காட்டின. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, நாங்கள் தான் 3வது பெரிய கட்சி. தங்களுக்கு ஜெயலலிதா இருந்த போது ஒதுக்கிய 41 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

ஆனால், அதிமுக தலைவர்கள் தேமுதிகவை ஒரு பொருட்டாகவே கண்டு கொள்ளவில்லை. இதனால் விரக்தியடைந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ‘‘ராமதாஸை தேடி, தேடி சென்று கூட்டணி குறித்து பேசும் அமைச்சர்கள், தங்களை மதிப்பதில்லை’’ என வெளிப்படையாகவே குமுறி இருந்தார். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும் அதிமுக, தேமுதிகவை உதாசீனப்படுத்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், தேமுதிக வாக்கு வங்கி மிகக்குறைவாக உள்ளதாலும், செல்வாக்கு குறைந்து விட்டதாலும் அவர்களுக்கு 4 முதல் 8 சீட் வழங்கலாம் என அதிமுக தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் பிரேமலதா, ‘‘விரைவில் எங்களை அழைத்து பேசவில்லை என்றால் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம்’’ என தெரிவித்திருந்தார். இருப்பினும், அதிமுக அவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை. இந்நிலையில் அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நடைபெற இருந்த நிலையில் பேச்சுவார்த்தை திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேமுதிக தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு யாரும் முன்வராத நிலையில் கூட்டணிப் பேச்சு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாமகவுக்கு கொடுக்கும் முக்கியத்தவத்தை தங்களுக்கு தரவில்லை என தேமுதிக நிர்வாகிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய சூழலில் நேற்று தேமுதிகவின் துணை சுதீஷ் ஒரு முகநூல் பதிவை பதிவிட்டிருந்தார். அதில் குறிப்பாக முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அவர்களை முன்னிறுத்தியும், அவர்களின் கட்சி சின்னத்தை இந்த தேர்தலில் மையமாக வைக்கப்போவதாகவும், கருத்து பதிவிட்டிருந்தார். இதையொட்டியே அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகி சென்று தனித்து போட்டியிடுகிறதா என்ற கேள்வி எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால் தனித்து போட்டியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ முடிவை அவர்கள் எடுத்து விட்டார்களா? என்பது குறித்த கருத்து தற்போது வரை வெளிப்படையாக தெரிவிக்காத சூழ்நிலையில் தான் தேமுதிகவை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த பேச்சுவார்த்தைக்கு தேமுதிக தரப்பில் இருந்து தற்போது வரை உறுதியாக பேச்சுவார்த்தைக்கு வருவதாக கருத்து தெரிவிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் அதிமுக - தேமுதிக இடையே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான வாய்ப்புகள் சற்று குறைவு எனவும் கூறப்படுகிறது. இதனிடையே தனித்து போட்டியிடுவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கும் வகையில் இன்று பிற்பகல் தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிகள் நீடிக்குமா? தனித்து போட்டி என்ற அஸ்திரத்தை கையில் எடுக்குமா? என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>