×

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை

டெல்லி: தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைப்பது குறித்து நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது.

இதனால் உலக சந்தையில் குறைந்த கச்சா எண்ணெய் விலையின் நன்மைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு பதிலாக மத்திய அரசு கடந்த 12 மாதங்களில் 2 முறை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை உயர்த்தியது.

இந்நிலையில் உலக சந்தையில் மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினம் ஒரு உச்சத்தை அடைந்து நுகர்வோருக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. டீசல் விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் தற்போது நுகர்வோர் மீதான வரிச்சுமையை சற்று குறைக்கும் விதமாக பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைக்கும் நடவடிக்கைகளை நிதியமைச்சகம் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகள், பெட்ரோலிய அமைச்சகம், பெட்ரோலிய நிறுவனங்களுடன் மத்திய அரசு பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனைகளுக்கு பிறகு இம்மாத மத்தியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Tags : Federal Finance Ministry , Petrol, Diesel
× RELATED மாநிலங்களுக்கு வரி பகிர்வில்...