முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்..? டெல்லி எல்லையில் 100-வது நாளை நெருங்கும் விவசாயிகள் போராட்டம்

டெல்லி: டெல்லி எல்லையில் 97-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். புதிய வேளாண் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் இதனை ஏற்பதற்கு விவசாயிகள் தயாராக இல்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இதுவரை 11 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்பதில் விவசாயிகள் தொடர்ந்து உறுதியாக இருந்து  வருகின்றனர். இந்நிலையில் டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 97-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தின் தாக்கம் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் எதிரொலித்த சூழலில் அடுத்ததாக தங்களுடைய போராட்டத்தை மேற்கு வங்க மாநிலத்தில் விரிவுப்படுத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த 3 மாதங்களில் கடும் குளிரால் 200-க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே மார்ச் 8-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கும் நிலையில் அதற்கு முன்னதாக 12-ம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்த மத்திய வேளாண் துறை அமைச்சர் முடிவு செய்துள்ளார்.

Related Stories:

>