பெண் எஸ்.பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம்: சிறப்பு டிஜிபி மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு: செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் மீதும் பாய்ந்தது வழக்கு: விசாரணை அதிகாரியாக எஸ்பி. முத்தரசி நியமனம்

சென்னை: காரில் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறப்பு டிஜிபி மீது புகார் அளிக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் மீது சிபிசிஐடி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், வழக்கு விசாரணை அதிகாரியாக எஸ்பி முத்தரசி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சிறப்பு டிஜிபி ஒருவர் முதல்வர் நிகழ்ச்சி பாதுகாப்பு அதிகாரியாக பணியில் இருந்தார். அப்போது பணியில்  இருந்த பெண் எஸ்.பியை அழைத்து பாதுகாப்பு தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி, தனது காரில் ஏற்றியுள்ளார். சிறிது நேரத்தில் பெண்  எஸ்.பி அதிர்ச்சியுடன் காரில் இருந்து வேகமாக இறங்கி சென்றார்.

பிறகு அன்றைய தினமே பெண் எஸ்.பி. சிறப்பு டிஜிபி மீது பாலியல் புகார் அளிக்க சென்னைக்கு வந்துள்ளார். இதை அறிந்த சிறப்பு டிஜிபி தனக்கு நெருக்கமான செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனை சமாதானம் பேச அனுப்பியுள்ளார். செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் போலீசார் உதவியுடன் இனோவா காரில் வந்த பெண் எஸ்.பி யை வழிமறித்து சமாதானம் பேச முயன்றார். ஆனால் பெண் எஸ்பி அதற்கு துணை போகாமல் சென்னைக்கு புறப்பட்டு செல்ல முயன்ற போது எஸ்பி கண்ணன் பெண் எஸ்பியின் கார் சாவை எடுத்து வைத்துக்கொண்டார்.

பின்னர் கடும் போராட்டத்திற்கு பிறகு பெண் எஸ்பி சென்னை வந்து உள்துறை செயலாளர் பிரபாகர் மற்றும் டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்தார். பெண் எஸ்.பி அளித்த புகாரின் படி உள்துறை செயலாளர் பிரபாகர், பாலியல் தொந்தரவு கொடுத்த சிறப்பு டிஜிபியை அதிரடியாக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி பதவியில் இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், பாலியல் புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு (விசாகா கமிட்டி) அமைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் பெண் எஸ்.பி கொடுத்த பாலியல் புகாரின் படி சிபிசிஐடி போலீசார் சிறப்பு டிஜிபி மீது ஐபிசி 354, பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் என 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல், பெண் எஸ்.பியை புகார் அளிக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன் மீதும் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி எஸ்பி முத்தரசி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது விசாரணையை நேற்றே தொடங்கிவிட்டார். முதற்கட்டமாக செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் வழிமறித்து  கார் சாவியை பிடிங்கிய சிசிடிவி காட்சிகையும் நேற்று எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், குற்றச்சாட்டிற்கு உள்ளான சிறப்பு டிஜிபி மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த எஸ்.பி கண்ணனுக்கு நேரில் ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டில் சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்பி ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் தமிழக காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: