×

பிரதமர் மோடி வலியுறுத்தல்: உணவு பதப்படுத்துதலில் புரட்சி

புதுடெல்லி: நாட்டில் விளைப்பொருட்களின் மதிப்பை அதிகரிக்கவும், சிறந்த விலை கிடைப்பதற்கும் உணவு பதப்படுத்துதல் துறையில் புரட்சி ஏற்பட  வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களை  செயல்படுத்துதல் குறித்த இணைய தள கருத்தரங்களில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டில் விவசாய சமூகத்தின் விளைபொருட்களை விற்பனை  செய்வதற்கான வழிகள் விரிவுப்படுத்தப்பட வேண்டும். கால்நடை வளர்ப்பு, பால்வளத்துறை, மீன் வளத்துறைக்கு முன்னுரிமை அளித்து வேளாண்  துறைக்கான கடன் ஒதுக்கீடானது 16.5லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  

கிராமப்புற உள்கட்டமைப்பு நிதியானது ரூ.40ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மைக்ரோ பாசனத்திற்கான ஒதுக்கீடு இரட்டிப்பாகி  இருக்கின்றது. 21ம் நூற்றாண்டில் அறுவடைக்கு பின்னர் உணவு பதப்படுத்துதல் என்பது வேளாண் துறையில் சக்தியை மேம்படுத்துவதற்கானதாக  இருக்கும். அதற்காக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பே இதனை செய்திருந்தால் நாடு மிகப்பெரிய பலனை  பெற்றிருக்கும். விவசாயிகளின் விளை பொருட்களின் மதிப்பை கூட்டுவதற்கும், அவற்றுக்கு சிறந்த விலை கிடைக்க செய்வதற்கும் உணவு  பதப்படுத்துதல் அவசியமாகும். உணவு பதப்படுத்துதல் புரட்சிக்காக விவசாய சமூகத்தோடு இணைந்து பொதுமக்கள்-தனியார் பங்களிப்பு மற்றும்  கூட்டுறவு அமைப்புக்கள் முழு பலத்தோடு முன்வர வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுக்காக நமது நாட்டின் விவசாய துறையை உலகளாவிய  சந்தையில் நாம் விரிவுப்படுத்த வேண்டும்.

கிராமங்களுக்கு அருகில் இருக்கும் தொழில் கூட்டமைப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதன் மூலமாக கிராம மக்கள்  விவசாயத்தோடு தொடர்புடைய வேலைவாய்ப்பை கிராமத்திலேயே பெற முடியும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஏதோ சதி நடக்கிறது
மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 3 மாதங்களாக விவசாயிகள் போராடி வரும் நிலையில், அவர்களுடன் மீண்டும்  பேச்சுவார்த்தையை தொடங்குவதில் மத்திய அரசு அக்கறை காட்டாமல் உள்ளது. இது குறித்து பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகெய்ட்  கூறுகையில், ”கடந்த 15-20 நாட்களாக மத்திய அரசு அமைதியாக இருக்கின்றது. இது ஏதோ சதி நடக்க இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும்.  அரசானது விவசாயிகளின் போராட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடுகின்றது. எதுவாக இருந்தாலும், பிரச்னைக்கு தீர்வு  காணும் வரை விவசாயிகள் பின்வாங்க மாட்டோம்” என்றார்.


Tags : Modi , Prime Minister Modi
× RELATED பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுக்க...