×

எல்லை பதற்றத்தை பயன்படுத்தி ஆன்லைனில் ஊடுருவல்: மும்பை மின்தடை சீன ஹேக்கர்களின் சதி?: அமெரிக்க ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் நீடித்த எல்லை பிரச்னையை பயன்படுத்தி, சீன ஹேக்கர்கள் இந்திய மின்தொகுப்பை சீர்குலைக்க திட்டமிட்டதாக  அமெரிக்க ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் அத்துமீறி ஊடுருவிய சீன  ராணுவத்தினரால் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால், அங்கு பதற்றம் நிலவியது. அதன் பிறகு, இரு தரப்பு ராணுவ உயரதிகாரிகள்  மட்டத்திலான 9 கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், படைகள் முழுவதுமாக திரும்ப பெறப்பட்டன.

இதனிடையே, எல்லையில் பதற்றம் நிலவிய போது, அதைப் பயன்படுத்தி, சீன அரசுடன் தொடர்புடைய சில குறிப்பிட்ட சீன ஹேக்கர்கள் ஆன்லைன்  மூலம், இந்திய இணைய தளத்தில் ஊடுருவி, இந்திய மின்தொகுப்பை சீர்குலைக்க சதி செய்திருப்பதாக, அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரை  தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரெகார்டட் ப்யூச்சர் நிறுவன ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில்  கூறப்பட்டுள்ளதாவது: கடந்த அக்டோபர் மாதம் மும்பையில் மிகப் பெரிய அளவிலான மின்தடை ஏற்பட்டது. இது குறைந்தபட்சமாக 2 மணி நேரம்  நீடித்தது. அப்போது கொரோனா கால கட்டம் என்பதால் பல மருத்துவமனைகளை செயல்பட முடியாமல் தவித்தன. வீட்டில் இருந்தபடி, அலுவலக  வேலை பார்த்து வந்த பணியாளர்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகினர்.  ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டதால், இந்த மின்தடை குறித்து விசாரணை நடத்த முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.  ஆனால், இந்த மின்தடைக்கு, ஆன்லைன் மூலம் இணையதளத்தில் ஊடுருவி தீங்கிழைக்கும் மென்பொருளை, சீன அரசுடன் தொடர்புடைய ரெட்எக்கோ  என்ற அமைப்பு, இந்திய மின்தொகுப்பு வடங்களில் செலுத்தியதே காரணமாக இருக்கலாம். கடந்த ஆண்டு தொடக்கம் முதல், மின் உற்பத்தி மற்றும்  பரிமாற்றம் தொடர்பான துறையில் உள்ள 12 இந்திய நிறுவனங்களின் 21 ஐபி. முகவரிகளை குறி வைத்து அதற்கு எதிரான சதியில் சீன ஹேக்கர்கள்  தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் ஷேடோபேட்’ என்ற கமாண்ட் மூலம் இந்திய மின் துறைக்குட்பட்ட, 5 மின் பரிமாற்ற  நிலையங்கள் உள்பட  10 பிரிவுகளை கட்டுப்படுத்த முடியும். இது தவிர, 2 இந்திய துறைமுகங்களும் அவர்களால் குறி வைக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசு, பொதுத்துறை, பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றை குறி வைத்து கடந்த மே முதல்  இவர்கள் செயல்பட்டுள்ளனர்.   இந்த உளவு நடவடிக்கைக்காக இவர்கள் பயன்படுத்திய `பிளக்எக்ஸ்’ என்ற மால்வேர் கடந்த பல ஆண்டுகளாக சீனாவில் பயன்பாட்டில் உள்ளது.  இந்தியாவையும், அதன் தனியார் துறை அமைப்புகளையும் குறிவைத்து, சீன அரசின் ஆதரவோடு பல அச்சுறுத்தும் இணைய தளக் குழுக்கள் இயங்கி  வருவதாக, கடந்த ஆண்டே நினைவுபடுத்தி உள்ளோம்.

Tags : Mumbai ,US , Mumbai, American study, shock
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!