அரசின் ‘பணப்பசிக்கு’ பாழாகும் பொதுத்துறை நிறுவனங்கள்: எல்ஐசியை விற்பது சாத்தியம்தானா?: சட்டமும் சிக்கல்களும்

வாழும் போதும்… வாழ்க்கைக்கு பிறகும்… இதுதான் இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசியின் விளம்பரம் வாசகம். இதை நம்பி  எல்ஐசியில் பாலிசி எடுத்தவர்கள் பல கோடி. இன்றுவரை எல்ஐசியும் மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்து வருகிறது. ஆனால், இன்றைக்கு  எல்ஐசிக்கே ஆபத்து வந்துவிட்டது. போட்ட பணத்துக்கே ஆப்பா? என்ற கிலியில் பாலிசிதாரர்கள் உள்ளனர். கடந்த பிப்ரவரி 1ம் தேதி  நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்த ஒற்றைவரி கோடிக்கணக்கான  பாலிசிதாரர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. எல்ஐசி நிறுவனத்தின்  பங்குகள் வெளிசந்தையில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு 2021-22ல்  விற்கப்படும் என்ற அறிவிப்புதான் அது.  

alignment=

இதுவரை பல பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு மத்திய அரசு தாரைவார்த்தபோதும், எல்ஐசி விவகாரம் அரசையே விற்பதற்கு சமம்  என்பதால் எல்ஐசி ஊழியர்கள், ஏஜென்டுகள், பாலிசிதாரர்கள், பொதுமக்களிடையே அதிர்வலைகள் பரவியது. மத்திய அரசு தனது செலவுகளை குறைக்க   முடியாமல் பரிதவிக்கிறது. வருவாய் அதிகரிக்கவும் வழியில்லை. வருவாய் பற்றாக்குறை சமாளிக்க எவ்வளவுதான் கடன் வாங்குவது. எனவே  பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை அரசு விற்று வருகிறது. 2020-21-ம் ஆண்டு பற்றாக்குறையின் ஒரு பகுதியை ஈடுகட்ட, பொதுத் துறை  நிறுவனங்களின் பங்குகளை விற்று, அதன் மூலம் 2.1 லட்சம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருக்கிறது.

அந்த பட்டியலில் முதலில் இருப்பது எல்ஐசி. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் என்று அழைக்கப்படும் எல்.ஐ.சியை   இப்படி கூறு போட்டு விற்க  முடியுமா? என்பதுதான் சாதாரண பாலிசிதாரர் முதல் பொருளாதார அறிஞர்கள் மனதில் எழுந்துள்ள கேள்வி. நாடு சுதந்திரம் பெற்ற போது  நூற்றுக்கணக்கான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஆங்காங்கே இயங்கி வந்தன. அதில், பாரத் இன்சூரன்ஸ் நிறுவனத்தை நடத்திய தொழிலதிபர்  ராமகிருஷ்ண டால்மியா மீது மோசடி புகார் எழுந்தது. விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபணமாக, அவர்  2 ஆண்டு சிறையில் தள்ளப்பட்டார்.  அதேநேரத்தில் ஒட்டுமொத்தமாக 245 தனியார்  இன்சூரன்ஸ் நிறுவனங்களை   1956ல்  தேசியமயமாக்கி எல்ஐசியை உருவாக்கினார் அன்றைய  பிரதமர் நேரு. இந்த நிறுவனத்தில் அரசின் மொத்த முதலீடே ஆரம்பத்தில் வெறும் ரூ.5 கோடிதான். இப்போது அரசு முதலீடு ரூ.100 கோடியாக  உள்ளது. ஆனாலும், இதன் முதலாளி என்று மத்திய அரசு மார்தட்டிக்கொள்ள முடியாது.

எல்ஐசியின் 33 கோடி பாலிசிதாரர்களே, அதன் உண்மையான முதலாளிகள். 1956ம் ஆண்டு நாடாளுமன்றம் நிறைவேற்றிய எல்ஐ.சி சட்டத்தின் கீழ்  பரஸ்பர நிதி அமைப்பு போன்ற கட்டமைப்புடன் எல்.ஐ.சி உருவாக்கப்பட்டது. அதன்படி பாலிசிதாரர்கள்தான்  நிறுவனத்தின் முதலாளிகள். இந்த  சட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் எல்ஐசியின் நிகர உபரி பணத்தில் 95 சதவீதத்தை பாலிசிதாரர்களுக்கும், மீதமுள்ள 5 சதவீதத்தை மத்திய அரசுக்கு  பகிர்த்தளிக்க வேண்டும். 

alignment=

alignment=

1956 முதல் 2000களின் துவக்கம் வரை ஆயுள் காப்பீடு என்பது எல்ஐசியின் கோட்டையாக இருந்தது. 2000ல் முதல் முறையாக தனியார் இன்சூரன்ஸ்  நிறுவனங்களுக்கு மீண்டும் அனுமதி கிடைத்தது. அதோடு ஆயுள் காப்பீடு துறையில் அன்னிய முதலீடும் அனுமதிக்கப்பட்டது. விளைவு,  கவர்ச்சிகரமான புதுப்புது இன்சூரன்ஸ் திட்டங்களை அறிவிக்கக் துவங்கின தனியார் நிறுவனங்கள். 20 ஆண்டுகள் கடந்த நிலையில், நாட்டில்  மொத்தம் 23 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன. இன்சூரன்ஸ் சந்தையில் 28 சதவீதம் மட்டும் அந்த தனியார் நிறுவனங்கள் வசம் உள்ளன.  மீதமுள்ள 72 சதவீத இன்சூரன்ஸ் வர்த்தகம் நம்ம எல்ஐசி வசம்தான். தனியார் போட்டியை சமாளித்து இன்றுவரை தாக்குபிடித்து வரும் எல்ஐசியின்  பங்குகளை இன்றைக்கு தனியாருக்கே தாரை வார்ப்பது அதை பலவீனப்படுத்தி அழிக்கும் முயற்சியின் முதல்படி என்று ஊழியர்கள்  குற்றம்சாட்டுகின்றனர்.

எல்.ஐ.சி. நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு, சுமார் ரூ.10  முதல் 12  லட்சம் கோடியாக இருக்கலாம் என்கிறார்கள். அதில் பத்து சதவீத பங்குகளை  வெளிச்சந்தையில் முதல்கட்டமாக விற்க அரசு முடிவு செய்திருக்கிறது. அதாவது ரூ.1 லட்சம் கோடியை திரட்டப்போகிறார்களாம். இதை தனியாருக்கு  தரப்போவதில்லை, சில்லறை முதலீட்டாளர்களுக்குதான் விற்க போகிறோம் என்று அரசு தரப்பில் கூறுகிறார்கள். இந்திய பங்கு சந்தையில் சில்லறை  முதலீட்டாளர்களே வெறும் 4 கோடிபேர்தான்.  இது இந்தியாவின் மக்கள் தொகையில் 3 சதவீதம்தான். இந்த 3 சதவீதம் பேர் நலன் முக்கியமா?  33கோடி பாலிசிதாரர்கள் நலன் முக்கியமா? என்ற கேள்விக்கு அரசுதான் பதிலளிக்க வேண்டும்.

நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை போனால் பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசிகளை உடனடியாக முடித்துக்கொண்டு பணமாக்க முயற்சிப்பார்கள்.  அதோடு புதிய பாலிசி எதுவும் எல்ஐசியில் எடுக்க மாட்டார்கள். வருவாய் குறைய குறைய எல்ஐசியின் மதிப்பும் குறைந்துவிடும், பின்னர் அரசிடம்  எஞ்சியுள்ள பங்குகளையும் மலிவு விலைக்கு விற்று விடலாம் என்று அரசு திட்டமிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த பங்கு விற்பனை மூலம் எல்ஐசியின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்றும் சப்பை கட்டுகிறார்கள். ஏற்கனவே எல்ஐசியின்  முதலீடுகள் குறித்த அறிக்கை ஆண்டுதோறும்  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. இதுவரை எல்ஐசி நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு தர பணம்  இல்லை என்று கைவிரித்தது இல்லை. அப்படி இருக்கும்போது புதிதாக என்ன வெளிப்படைதன்மை வரப்போகிறது என்கிறார்கள் ஊழியர்கள்.  பிரதமர் மோடி, தொழில், வர்த்தகம் செய்வது அரசின் வேலை அல்ல என்று புதிதாக பேசத் தொடங்கியிருக்கிறார்.

இது இந்தியாவில், இனி எல்லாமே தனியார் வசம்தான் என்பதை காட்டுகிறது. ஏற்கனவே பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை விற்க எல்லா  ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. இப்போது, எல்ஐசி பங்கு விற்பனையை தடுத்து நிறுத்தாவிட்டால், இன்னும் சில ஆண்டுகளில் பொதுத்துறை  நிறுவனங்கள் எதுவுமே அரசிடம் மிஞ்சியிருக்காது. தனியாரிடம் போய்விடும் அபாயம் உள்ளது. இதனால், ஒன்றுதிரண்டு போராடி எல்ஐசியை  காப்போம் என்று எல்ஐசி ஊழியர்கள், ஏஜென்டுகள் சூளுரைத்துள்ளனர்.

முதலீடுகள்

பாலிசிதாரர்கள் செலுத்தும் பிரீமியத்தில் 67 சதவீதத்தை  மத்திய, மாநில அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. அதே நேரத்தில்,  அங்கீகரிக்கப்பட்ட கடன் பத்திரங்களிலும், 15 சதவீதம் பங்கு சந்தையிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 3 சதவீதம் பணம் சொத்துக்கள் வாங்க  பயன்படுத்தப்படுகிறது. இப்படிதான் சென்னையில் 14 மாடி எல்ஐசி கட்டிடம் உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் எல்ஐசிக்கு ஆயிரக்கணக்கான  கோடிக்கு சொத்து உள்ளது. இப்போது இந்த சொத்துக்களையெல்லாம் தனியாரிடம் தாரை வார்க்க அரசு திட்டமிட்டுள்ளது.  பங்கு சந்தை முதலீடுகளை  பொருத்தவரை 353 நிறுவனங்களில் ஒரு சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை எல்ஐசி வாங்கி குவித்துள்ளது. இதில்,68 பொதுத்துறை நிறுவனங்கள்.  மொத்தத்தில் 69 பெரும் நிறுவன பங்குகளையும், 54 நடுத்தர நிறுவனங்களிலும் எல்ஐசி பங்குதாரராக இருக்கிறது.

அனுபவம்

பொது காப்பீட்டு நிறுவனங்களான ஜிஐசி , நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆகியவற்றின் பங்குகள்  விற்பனை செய்யப்பட்டன. அவற்றில் இன்றைய  நிலைமையில் சில்லறை முதலீட்டாளர்கள் கைகளில் எவ்வளவு உள்ளது தெரியுமா? ஜிஐசி  பங்குகளில்  1.6%. நியூ இந்தியா அஷ்யூரன்ஸில் 0.83%  மட்டுமே சில்லறை முதலீட்டாளர்கள் கையில் உள்ளது. எல்ஐசி பங்கு விற்பனையிலும் இதே கதிதான் ஏற்படும். சில்லறை முதலீட்டாளர்களிடம்  இருந்து பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் நிறுவனங்கள் வாங்கி குவித்துவிடும் அபாயம் உள்ளது.

அரசின் ஆபத்பாந்தவன்

பங்கு சந்தையில் திடீர் சரிவா கூப்பிடு எல்ஐசியை. அரசு நிறுவன பங்கு விற்பனைக்கு சந்தையில் வரவேற்பில்லையா கூப்பிடு எல்ஐசியை. ஏதாவது  திவாலான வங்கியை காப்பாற்ற வேண்டுமா? கூப்பிடு எல்ஐசியை. இப்படி எதற்கெடுத்தாலும் எல்ஐசிதான் மத்திய அரசின் ஆபத்பாந்தவனாக இதுவரை  திகழ்ந்துள்ளது. இப்படிதான் திவாலான ஐடிபிஐ வங்கியை எல்ஐசி தலையில் கட்டியது மோடி அரசு. அப்போது, அந்த வங்கியில் எல்ஐசி முதலீடு  செய்த ரூ.21 ஆயிரம் கோடியின் இன்றைய மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடிக்கும் கீழ் சரிந்துவிட்டது.  அரசு தனது தேவைக்காக எல்ஐசி என்னும்  உண்டியலை தேலைப்படும்போதெல்லாம் உடைத்து பணத்தை எடுத்து வந்தது. இப்போது உண்டியலையே விற்க திட்டம் போட்டுவிட்டது என்று  ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

ஏழைகளுக்கு பாலிசி கிடைக்குமா?

எல்ஐசியில் மாதம் சில நூறு ரூபாய்கள்  பிரீமியம் செலுத்தும் திட்டம் கூட உண்டு. ஆனால், எல்ஐசியின் நிர்வாகம் தனியார் வசம் போனால்  நிலைமை மாறும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிக பிரீமியம் செலுத்தும் திட்டங்களுக்குதான் தனியார் முன்னுரிமை  தருவார்கள். இதனால், ஏழைகளுக்கு இன்சூரன்ஸ் பலன் கிடைக்காமலேயே போய்விடும் அபாயம் உள்ளது.

அரசு உத்தரவாதம்

எல்ஐசி நிறுவனமே திவாலானாலும் பாலிசிதாரர்களுக்கு தரவேண்டிய பணத்தை மத்திய அரசு தந்துவிடும். இதற்கான உத்தரவாதத்தை மத்திய அரசு  தந்துள்ளது. அந்த உத்தரவாதத்துக்கான கட்டணமே லாபத்தில் 5 சதவீதம் தருவது.  அரசு உத்தரவாதமே எல்ஐசியில் மக்கள் நம்பிக்கையோடு பாலிசி  எடுத்ததற்கு காரணம். இப்போது தனியார் வசம் போனால் அந்த உத்தரவாதம் வாபசாகிவிடும் அபாயம் உள்ளது.

Related Stories: