30க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய பார்டர் தோட்டம் ரவுடி: வாகனம் மோதி கொலை?: போலீசார் விசாரணை

சென்னை: திருவல்லிக்கேணி பார்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (எ) கருத்து பாஸ்கர் (24), பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை  முயற்சி, அடிதடி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் அண்ணா சாலை, அண்ணா சதுக்கம், திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ், ஜாம்பஜார்  காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ரவுடி பாஸ்கர் நேற்று முன்தினம் இரவு மெரினா கடற்கரைக்கு செல்ல, கண்ணகி சிலை  அருகே காமராஜர் சாலையை கடந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் அவரை மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட ரவுடி பாஸ்கர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் பாஸ்கரை  மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ரவுடியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர்  இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, மெரினா காமராஜர்  சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விபத்தை ஏற்படுத்திவிட்டு மாயமான வாகனத்தை தேடி வருகின்றனர். இவரது  எதிரிகள் திட்டமிட்டு வாகனத்தை மோதி அவரை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>