அதிமுக மாவட்ட பொறுப்பாளர் சார்பில் வாக்காளர்களுக்கு வழங்க இருந்த 180 அரிசி மூட்டைகள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை

தண்டையார்பேட்டை: அதிமுக மாவட்ட பொறுப்பாளர் சார்பில் வாக்காளர்களுக்கு வழங்க இருந்த 180 அரிசி மூட்டைகளை தேர்தல் அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல்  கட்சிகள் சார்பில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன.  இந்த பறக்கும் படையினர் வாகன சோதனை மற்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளில் ஆளும்கட்சியினர் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அதிகாரிகள் சோதனை நடத்தி, அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக வடகிழக்கு மாவட்டபொறுப்பாளர் ராஜேஷ்  விதிகளை மீறி வாக்காளர்களுக்கு அரிசி, அயன்பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை கொடுப்பதற்காக, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார்  திருமண மண்டபம் மற்றும் குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் பரவியது.

இதுகுறித்து வடசென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, மாவட்ட அமைப்பாளர் மருதுகணேஷ்  ஆகியோர் நேற்று முன்தினம் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி முகமது அஸ்ஸாமிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் பறக்கும் படை அதிகாரிகள்  நேற்று திருமண மண்டபத்தில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு 180 மூட்டை அரிசி இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.  ஆனால், அதிமுக மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதேபோல், ராயபுரம் பகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் பேனர்களை அகற்றாமல் உள்ளனர். இதுகுறித்தும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்  அதிகாரிகள் அரசியல் கட்சியினரிடையே எந்த பாகுபாடும் இன்றி நடந்துகொள்ள வேண்டும். ஆனால் ஆர்.கே நகரில் தேர்தல் அதிகாரிகள்  ஆளும்கட்சியினருக்கு சாதகமாகவே செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் இந்த பகுதியில் நேர்மையான  அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>