டெல்லி எய்ம்ஸில் முதல் நபராக போட்டுக்கொண்டார்: பிரதமர் மோடிக்கு கோவாக்சின் தடுப்பூசி: நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் வந்தனர்: துணை ஜனாதிபதி, பீகார், ஒடிசா முதல்வர்களுக்கு முதல் டோஸ்

புதுடெல்லி: நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் நபராக பிரதமர் நரேந்திர  மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி  கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின்  கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் ஆகியோருக்கு  கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதுவரை 1.43 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட  இணை நோய்கள் கொண்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. நாட்டில் முதல் மூத்த குடிமகனாக பிரதமர் நரேந்திர  மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.  காலை 6.30 மணிக்கு மருத்துமவனைக்கு வந்த அவர்  கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவருக்கு  புதுச்சேரியை சேர்ந்த செவிலியர் நிவேதா தடுப்பூசியை போட்டுவிட்டார். உள்நாட்டில்  தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது மற்றும் இறுதிகட்ட பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படாததால் அந்த தடுப்பூசியை  போட்டுக் கொள்ள மக்கள் மத்தியில் தயக்கம் இருந்து வருகிறது. இந்த அச்சத்தை போக்கும் விதமாக பிரதமர் மோடி கோவாக்சின் தடுப்பூசியை தேர்வு  செய்து போட்டுக்கொண்டார்.  

பின்னர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ” தகுதி உடைய அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று  இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்” என குறிப்பிட்டு இருந்தார். தனக்கு தடுப்பூசி போட்ட புதுச்சேரி செவிலியர் நிவேதா, மற்றும் கேரளாவை  சேர்ந்த செவிலியருடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார். மோடியைத் தவிர, துணை ஜனாதிபதி வெங்கய்யா  நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர்   சரத்பவார், அவரது மனைவி பிரதிபா மற்றும் மகளும், பாராமதி நாடாளுமன்ற  உறுப்பினரான சுப்ரியா சூலேஉள்ளிட்ட பலரும் தடுப்பூசி போட்டுக்  கொண்டனர். நாடு முழுவதும் பல முதியவர்களும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.  இதற்கிடையே, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தடுப்பூசி எங்களுக்கு வேண்டாம்’

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2வது கட்ட கொரோனா  தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கிய நிலையில் கொரோனாவை கண்டு அஞ்சவில்லை என்று விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.  இது குறித்து சம்யுக்தா கிசான் மோர்சா சங்கத்தின் மூத்த தலைவர் பல்பீர் சிங்(80) கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக  செல்ல மாட்டேன். எனக்கு கொரோனா தடுப்பூசி அவசியமில்லை. நாங்கள் கொரோனாவை கொன்றுவிட்டோம். விவசாயிகளின் நோய் எதிர்ப்பு சக்தி  வலிமையானது. ஏனென்றால் நாங்கள் வயல்களில் வேலை செய்பவர்கள். விவசாயிகள் கொரோனா வைரஸ் தொற்றை கண்டு பயப்படவில்லை”  என்றார். இதேபோல் சங்கத்தை சேர்ந்த 60வயதுக்கு மேற்பட்ட மூத்த தலைவர்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டோம் என்றே  கருத்து தெரிவித்துள்ளனர்.

பத்து லட்சம் பேர் பதிவு

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு கோ-வின் இணையதளத்தில் மட்டுமே மக்கள் பதிவு செய்ய வேண்டுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.  கோ-வின் மொபைல் செயலியில் நிர்வாக வசதிகளுக்காக மட்டுமே பயன்படுத்துவதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.  நேற்று பிற்பகல் 1 மணி வரை கோவின் இணையதளத்தில் 10 லட்சம் பேர் தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு செய்துள்ளனர். அரசு  மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது.

சீரம், பாரத் பயோடெக்கிற்கு சீன ஹேக்கர்கள் குறி

உலகளவில் விற்பனையாகும் தடுப்பு மருந்துகளில் 60 சதவீதம் இந்தியாவில் தயாரிப்படுகின்றன. தற்போது கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பிலும்  இந்தியாவின் சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்பம், வினியோக  அமைப்பை, சீன அரசு ஆதரவுடன் ஸ்டோன் பாண்டா என்றழைக்கப்படும் ஏபிடி10 குழுவின், ஹேக்கர்கள் உளவு பார்த்து வருவதாக, சிங்கப்பூர்,  டோக்கியோவில் செயல்படும் சைபிர்மா என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், அறிவுசார் உடைமையை திருடி, இந்திய மருந்து தயாரிப்பு  நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த, திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எந்த ஊரு நீங்க?

பிரதமர் மோடிக்கு தடுப்பூசி போட்ட புதுச்சேரி நர்ஸ் நிவேதா கூறுகையில்,‘‘நான் எய்ம்ஸில் பணியில் சேர்ந்து 3 ஆண்டு ஆகின்றது. தற்போது தான்  கொரோனா தடுப்பூசி பிரிவுக்கு மாற்றப்பட்டேன். நேற்று காலை நான் பணிக்கு வந்த பின்னர் தான் பிரதமர் தடுப்பூசிபோட்டுக்கொள்வதற்காக வருவது  தெரியவந்தது. பிரதமருக்கு தடுப்பூசி போட்டது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அவர் எங்களிடம் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்  என விசாரித்தார்’’ என்றார்.

இதுவும் நடிப்பு தானா...?!!

பிரதமர் நரேந்திரமோடி முதல் நபராக தடுப்பூசி போட்டு கொண்டது டிவிட்டரில் நேற்று டிரெண்டிங் ஆனது. பலரும் அவரை பாராட்டிய நிலையில்,  பலரும் விமர்சனம் செய்யவும் தவறவில்லை. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களுக்கு  கொரோனா தடுப்பூசியை உடலில் குத்தி மருந்து செலுத்துவது புகைப்படங்களில் தெளிவாக தெரிகின்றது. ஆனால் பிரதமர் மோடிக்கு நர்சு தடுப்பூசி  போடும்போது ஊசியை உடலில் செலுத்துவது தெரியாதபடி செவிலியரின் கை மறைத்துள்ளது. இந்த புகைப்படங்களை டிவிட்டரில் வெளியிட்ட சிலர்,  ‘பிரதமர் உண்மையிலேயே தடுப்பூசியை போட்டுக்கொண்டாரா? அல்லது எப்பவும் போல லைட்ஸ் ஆன்... கேமரா... ஆக்‌ஷன் தானா?’ என  கிண்டலடித்துள்ளனர்.

புதுச்சேரி நர்ஸ்...அசாம் துண்டு...தேர்தல் கலக்கல்

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதனை மையமாக கொண்டே மக்களை கவருவதற்காக பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார் என  சர்ச்சை எழுந்துள்ளது. அதோடு, பிரதமர் மோடிக்கு புதுச்சேரி நர்ஸ் தடுப்பூசி போட்டுள்ளார். அவருடன் இருந்த துணை செவிலியர் கேரளாவை  சேர்ந்தவர். இதுமட்டுமின்றி பிரதமர் மோடி தனது  கழுத்தில் கமோசா எனப்படும் துண்டு அணிந்திருந்தார். இது அசாமியர்களின்  கலாசாரத்தை  பிரதிபலிப்பதாகும். இப்படி, விரைவில் தேர்தல் நடக்க உள்ள புதுச்சேரி, கேரளா, அசாம் என தடுப்பூசியிலும் அரசியலை கலந்துள்ளார் பிரதமர் மோடி.

Related Stories: